Thursday, November 20, 2008

நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார்.

பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். வயோதிகம் காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலிவுற்றிருந்த நம்பியார், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் புதன்கிழமை மதியம் அவருக்குத் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளித்தும் பலனின்றி புதன்கிழமை மதியம் 12.30 மணிக்கு அவர் காலமானார். அவருக்கு வயது 89.

மஞ்சேரி முதல் கோபாலபுரம் வரை :


மறைந்த நம்பியாரின் முழுப் பெயர் மஞ்சேரி நாராயணன் நம்பியார். கேரளத்திலுள்ள மஞ்சேரியில் 1919-ம் ஆண்டு பிறந்தார். தன்னுடைய 13 வயதில் நவாப் ராஜமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், 1935-ம் ஆண்டு தமிழிலும் ஹிந்தியிலும் தயாரான "பக்த ராமதாஸ்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

இதையடுத்து சிறு வேடங்களில் நடித்து வந்த நம்பியார் தன்னுடைய தனித்துவம் நிறைந்த வில்லத்தனமான நடிப்பால் அனைவரையும் ஈர்த்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், டி.எஸ்.பாலையா, அசோகன், பி.எஸ்.வீரப்பா, ஜெய்சங்கர், நாகேஷ், எஸ்.எஸ்.ஆர். ஆகியோருடன் பல படங்களில் இணைந்து நடித்தவர்.


சிவகுமார், எஸ்.எஸ்.ஆர்., ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், பிரபு, கார்த்திக், அர்ஜுன், கே.பாக்யராஜ், அஜித், விஜய், பிரசாந்த், நடிகைகள் சாவித்ரி, பத்மினி, அஞ்சலிதேவி, சரோஜாதேவி, வைஜெயந்திமாலா, மனோரமா, கே.ஆர்.விஜயா, விஜயசாந்தி, ராதிகா, அம்பிகா, ராதா, நதியா, குஷ்பு, ஜோதிகா உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் நம்பியாருடன் இணைந்து நடித்துள்ளனர்.


"வித்யாபதி', "ராஜகுமாரி', "அம்பிகாபதி', "ஆயிரத்தில் ஒருவன்', "மந்திரிகுமாரி', "மர்மயோகி', "அரசிளங்குமரி', "சர்வாதிகாரி', "மிஸ்ஸியம்மா', "எங்க வீட்டு பிள்ளை', "உத்தம புத்திரன்', "உலகம் சுற்றும் வாலிபன்', "தில்லானா மோகனாம்பாள்', "நெஞ்சம் மறப்பதில்லை', "தங்கமகன்', "குரு', "தூறல் நின்னு போச்சு', "மூவேந்தர்', "பூவே உனக்காக', "பூவெல்லாம் உன் வாசம்', "சுவாமி ஐயப்பன்' உள்ளிட்ட பல படங்கள், நம்பியாரின் மாறுபட்ட நடிப்பாற்றலைப் பறைசாற்றியவை.


முன்னாள் முதல்வர் அண்ணாவின் "வேலைக்காரி' படத்தில் நடித்த பெருமைக்குரியவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் ஏராளமான படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்தவர்.

கடந்த பிப்ரவரி மாதம் தனது 60-வது பிறந்த நாளை முன்னிட்டு, நம்பியாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் ஜெயலலிதா.


முதல்வர் கருணாநிதியின் "நாம்' படத்தில் மூன்று பாடல்களை சொந்தக் குரலில் பாடியுள்ள நம்பியார் "திகம்பர சாமியார்', "நல்ல தங்கை', "கல்யாணி' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.


இதில் "திகம்பர சாமியார்' படத்தில் 11 மாறுபட்ட வேடங்களில் நடித்து சாதனை புரிந்தவர். இந்தப் படத்தில் இடம்பெற்ற நம்பியாரின் போலிச் சாமியார் வேடம் அந்தக் காலகட்டத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நம்பியார், 1952-ம் ஆண்டு "ஜங்கிள்' என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்த பெருமைக்குரியவர்.
சினிமாவில் பிரபலமடைந்து பிஸியாக இருந்த காலகட்டத்தில், "நம்பியார் நாடக மன்றம்' என்ற பெயரில் பல மேடை நாடகங்களை அரங்கேற்றி... தன்னை நடிப்பில் மெருகேற்றிய நாடகத் துறைக்குக் கைமாறு செய்தவர்.
கடந்த 60 ஆண்டுகளாக நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ள நம்பியார், 1967-ம் ஆண்டு கலைமாமணி விருதையும் 1990-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். விருதையும் பெற்றவர்.


மறைந்த நம்பியாருக்கு மனைவி ருக்மணி, சுகுமாறன் நம்பியார், மோகன் நம்பியார் என்ற இரண்டு மகன்களும், சினேகலதா என்ற மகளும் ஐந்து பேரக் குழந்தைகளும் உள்ளனர். சுகுமாறன் நம்பியார், பா.ஜ.க.வின் அகில இந்தியப் பொருளாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

நம்பியாரின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக கோபாலபுரத்தில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல், திரையுலக, தொழில் வட்டாரத்தின் முக்கியப் பிரமுகர்கள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
நம்பியாரின் இறுதிச் சடங்கு, சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெறுகிறது.

3 comments:

Sundar said...

thanks for the news!

மு.வேலன் said...

நடிகர் எம். என். நம்பியாரை பற்றி அதிகமாக தெரிந்துக்கொள்ள உதவியதற்கு நன்றி.

தங்க முகுந்தன் said...

எனது பதிவில் தனியாக ஒரு பதிவிட்டுள்ளேன்! எம்மை வழிகாட்டிய குருசுவாமிக்கு இங்கும் நாம் எமது வணக்கத்தைத் தெரிவிக்கின்றேன்