Sunday, December 28, 2008

உயிரை விடவும் தயாராக இருக்கிறேன் - முதல்வர் கருணாநிதி

திமுக பொதுக்குழுக் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் தலைவராக 10-வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் கருணாநிதி. இதைத் தொடர்ந்து, பொதுக்குழுவுக்கு நன்றி தெரிவித்து அவர் பேசியதாவது:
இலங்கைப் பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி சட்டப் பேரவை உறுப்பினர் பதவியைத் துறந்தேன். இப்பிரச்னைக்காக உயிரை விடவும் தயாராக இருக்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி உருக்கமாகப் பேசினார்.

பொதுக்குழு தீர்மானத்தில் இலங்கைப் பிரச்னை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்க்க குறுக்கு வழியில், வன்முறை வழியில், நாட்டுக்கு விரோதமான வழியில் செல்ல விரும்பவில்லை. ஏற்றுக் கொள்ளும் முடிவாக... இந்தப் பிரச்னையில் மத்திய அரசு எடுக்கும் முடிவு, நாம் ஏற்றுக் கொள்ளும் முடிவாக இருக்க வேண்டும். நாம் விரும்புகின்ற அவசரத்துக்கு வேகமாக முடிவெடுக்காமல் இன்னும் இன்னும் தாமதிக்கின்றனர். தாமதிக்கும் ஒவ்வொரு மணி நேரத்திலும், இலங்கையில் ஒவ்வொரு தமிழனின் பிணம் விழுந்து கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் மறந்து விடக்கூடாது.

இலங்கைப் பிரச்னை குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் தில்லி சென்ற போது, வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று முறையிட்டோம். விரைவில் அவர் இலங்கை செல்வார் என அறிவித்தார்கள். அவர்கள் அதைச் செய்வார்கள் என்று காத்திருக்கிறோம்; நம்பி இருக்கிறோம். பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி, அங்கு போர் நிறுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு மதிப்பளித்து இதைச் செய்து கொடுக்க வேண்டும்.

மிரட்ட விரும்பவில்லை... இலங்கைத் தமிழர்களுக்காக இங்குள்ள தமிழர்கள் கதறி அழுது கொண்டிருக்கிறோம். இந்தப் பிரச்னையைத் தீர்க்கக் கோரி, குறுக்கு வழியில் மிரட்ட விரும்பவில்லை. இலங்கைப் பிரச்னையில் திமுகவின் நிலையை, தமிழக அரசின் நிலையை ஏற்கெனவே விளக்கி இருக்கிறேன்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணத்துக்கு முன்பு ஒரு பகுதியாக, அவரது மரணத்துக்குப் பின்பு ஒரு பகுதியாக என இரண்டு பகுதிகளாக இப்பிரச்னையைப் பார்க்க வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்னை, இங்குள்ள தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல; வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் மனதிலும் ஆறாத ரணமாக உள்ளது. அந்த ரணத்தை ஆற்ற அதற்கு மருந்து போட மத்திய அரசு முன்வர வேண்டும். குடுகுடுப்பை பேச்சு... நம்முடைய குரலை திசை திருப்ப, புலிகளுக்கு ஆதரவு என்று சிலர் வக்கிரமான அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். அவர்களை புறந்தள்ள வேண்டும். தமிழ் உணர்வோடு விடுக்கப்படும் கோரிக்கைளுக்கு இடம் தந்து அங்கு அமைதியை உருவாக்க வேண்டும்.

இலங்கைப் பிரச்னை குறித்து பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கண்கலங்க வைத்துள்ளது. இந்தத் தீர்மானத்தை ஏற்று மத்திய அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கைப் பிரச்னை குறித்து சிலர் ஆவேசமாகப் பேசுகின்றனர். அந்த குடுகுடுப்பை பேச்சு, முரசாகாது; பேரிகையாகாது. இந்த குடுகுடுப்பை பேச்சுக்கு மயங்காமல் இலங்கைத் தமிழர்கள் வாழ தக்க வழி காண்போம்.
அதுவரை அமைதியாக இருப்பதற்கு வழி இல்லாவிட்டாலும் கூட, எப்படி நம்முடைய எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வது, எப்படி அவர்களுடைய கண்களைத் திறப்பது, அவர்களுடைய காதுகளில் நம்முடைய கருணை மனுவை, அதனுடைய வாசகங்களை திணிப்பது என்பதற்காக பாடுபடுவோம். பணியாற்றுவோம்.

உயிரையும் துறப்போம்... இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக, நானும் (கருணாநிதி), பேராசிரியர் அன்பழகனும் சட்டப் பேரவை உறுப்பினர் பதவிகளைத் துறந்தோம். இந்தப் பிரச்னையைத் தீர்க்க எதையும் துறப்போம். இலங்கைத் தமிழர்கள் வாழ உயிரைத் துறக்கவும் தயார். இதற்குப் பிறகாவது நம் தமிழர்களைக் காக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்றார் கருணாநிதி.

1 comments:

வனம் said...

வணக்கம் ஜோதிவேல்

அதுஎல்லாம் சரிதான் அவரின் சில மாத ஆயுசே இருக்கும் பதவிகளைகூட விடமுடியாதவருக்கு எந்த வகையில் தார்மீக பொருப்பு இருக்கின்றது?

நன்றி
இராஜராஜன்