Saturday, January 10, 2009

சென்னை புத்தகக் கண்காட்சி நாள்-02

சென்னை புத்தகக் காட்சியின் ஒவ்வொரு நாள் மாலையும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை உலக திரைப்படம்- குறும்படம் ஆவணப்படத் துவக்க விழா நடைபெற்றது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் காந்திகண்ணதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் திரைப்பட இயக்குநர் சி.வி.ராஜேந்திரன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த ச.தமிழ்ச்செல்வன், இரா.தெ. முத்து, இரா.நடராசன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் மு.சபாபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் சி.வி.ராஜேந்திரன் கூறியதாவது:
"புதிய உணர்வுகளை அறிவுகளைக் கொடுப்பவர்கள் முன்னோடி. சிறுகதைக்கு முன்னோடி புதுமைப்பித்தன். கவிதைக்கு முன்னோடி கவிஞர் கண்ணதாசன். அதுபோல இயக்குநர்களில் முன்னோடி ஸ்ரீதர். திரைப்படத்துறையில் பல புதுமைகளைச் செய்திருக்கிறார். அவர் பெயரை குறும்படங்களைத் திரையிடும் அரங்கத்திற்கு வைத்திருப்பது மிகவும் பொருத்தமானது. இன்று வருகிற திரைப்படங்களில் நூற்றுக்கு ஐந்து படங்கள்தாம் சிறப்பானதாக இருக்கின்றன. எனவே இந்தக் குழந்தைகளுக்கான குறும்படங்களை அதிகம் திரையிடுவதன் மூலம் குழந்தைகளின் சினிமா ரசனையை வளர்க்க முடியும். வருங்காலத்தில் நல்ல திரைப்படங்கள் வருவதற்கு இது மிகவும் அவசியமானது'.

ச.தமிழ்ச்செல்வன்:குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்று பெரியவர்கள் நினைத்துக் கொண்டு எழுதுகிற புத்தகங்கள் பெரும்பாலானவை பெரியவர்களுக்கானவை. குழந்தைகள் உலகமே வேறு. குழந்தைப் பருவத்தில் இருந்தே நாம் படிக்கும் புத்தகங்கள் நமக்குள் பல கருத்துகளை உருவாக்குகின்றன. அந்தக் கருத்துகளின் அடிப்படையில்தான் நாம் பெரியவர்களானதும் ஏதாவது ஒரு பாதையைப் பின்பற்றுகிறோம்.
இந்தக் காலத்துக் குழந்தைகள் பெரியவர்களைவிட விரைவாக நவீனத் தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். நாம் நினைப்பதைவிட புத்திசாலியாக இருக்கிறார்கள். இதைக் கணக்கில் கொண்டு குழந்தைகளுக்கான புத்தகங்களை உருவாக்க வேண்டும்'. என் கூறினார்.

0 comments: