சமீபத்தில் சென்னை புழலில் உள்ள மத்திய சிறைச்சாலையில் கைதிகளிடையே இரு தரப்பினருக்குள் அண்மையில் ஏற்பட்ட மோதலில், ஆயுள் கைதி வெல்டிங் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கொலையாளிகள் எனக் கருதப்படும் மூன்று கைதிகளைக் கைது செய்து வழக்கும் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
ஆயுள் கைதி வெல்டிங் குமாருக்கு, சிறைக்குள் சில கைதிகள் மரியாதை தரவில்லை என்பதால் இந்த மோதல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டாலும், சிறை அதிகாரிகளில் சிலர் வேறு தகவலையும் தருகின்றனர். அதாவது, சிறைக்குள் இருக்கும் பணவசதி படைத்த கைதிகள் அல்லது விசாரணைக் கைதிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வது மற்றும் அவர்களுடைய செல்போன்களை தங்கள் பொறுப்பில் வைத்துக்கொள்வது போன்ற பணிகளை சில கைதிகள் ஏற்று நடத்தியதாகவும், இதற்காக கட்டணமும் வசூலித்து வந்ததாகவும், இந்த அதிகார மையம் யாருடையது என்ற பிரச்னைதான் இந்த மோதலுக்கும் கொலைக்கும் காரணம் என்கிறார்கள்.
இந்த முறைகேடுகள் புழல் சிறையில் உள்ள அதிகாரிகளுக்குத் தெரியாமல் நடந்தது என்று சொன்னால் அதை விட பச்சைப்பொய் வேறு எதுவும் இருக்க முடியாது. இத்தகைய முறைகேடுகளை சிறைக்குள் அனுமதித்த, அதிகாரிகள்தான் இத்தகைய மோதலுக்கும் சிறைக்குள் நடந்த கொலைக்கும் முக்கிய காரணம் மற்றும் பின்புலம் என்பது வெளிப்படை.
கைதிகள் பணம் படைத்தவராக இருந்தால், சிறை மதில்களை விட்டு வெளியே வரமுடியாது என்கிற ஒன்றைத் தவிர, உலகின் அனைத்து செüகரியங்களும் சுகபோகங்களும் அவர்களைத் தேடி வரும் என்பதுதான் உண்மைநிலையாக இருக்கிறது. தீவிரவாதிகள் என்று கைது செய்யப்பட்டிருந்தாலும், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சமூக விரோதிகள் என்றாலும் சிறைக்குள் விரும்பியபடி உலா வரவும், விரும்பியபடி தங்கள் செலவில் பிரியாணி சமைத்துச் சாப்பிடவும், சிகரெட், மது அருந்தவும், மார்வலி அல்லது ரத்தக்கொதிப்பு என்ற பெயரில் மருத்துவமனையில் தனி அறையில் அரசு பாதுகாப்புடன் சுகமாக இருக்கவும் முடியும். இதற்குத் தேவை பணம், அல்லது கொலைமிரட்டல் விடும் அளவுக்கு பின்புலம். இதனால் சில கைதிகள் சிறைக்குள்ளேயே "தலை'யாகச் செயல்படுவதோடு, செல்போன்கள் மூலமே சிறைக்கு வெளியே தங்கள் ஆட்களுக்கு கட்டளையிட்டு, காரியம் நடத்தும் வல்லமையும் பெற்றிருக்கிறார்கள்.
சிறைக்குள் செல்போன்களும் ஆயுதங்களும் சிலவேளைகளில் ரிவால்வர்களும்கூட கண்டெடுக்கப்பட்டும் எந்தவொரு சிறை அலுவலரும் தண்டிக்கப்பட்டதில்லை. சிறைப்பதிவேட்டில் பெயர் பதிவு இல்லாமலேயே சிறைக் கைதியைச் சந்திக்க முடியும் என்கிற அளவுக்கு சட்ட மீறல்கள் நடக்கும் இடமாக சிறைக்கூடங்கள் மாறியிருக்கின்றன. பிரியங்கா, நளினி சந்திப்பு இதற்கு உதாரணம். அதற்கு உதவிய பெண் அதிகாரிக்கு பதவி உயர்வு தரப்பட்டிருக்கிறது.
சிறைத்துறையில் ஊழல் புரையோடிக் கிடப்பதோடு, குற்றவாளிகளைச் சிறைக்குள்ளும் "தலை'களாகத் திரிய அனுமதித்து, குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமாகவே சிறைக்கூடத்தை மாற்றுவது அங்குள்ள சிறை அலுவலர்கள்தான்.
இந்த நிலைமை மாற வேண்டுமானால், சிறையில் நடந்த கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றவாளிகள் என மத்திய சிறை அதிகாரிகள் மீதும் வழக்குத் தொடுப்பதுதான் மற்ற சிறை அலுவலர்களை சட்டத்தின்படி நடக்கச் செய்யும். வெறும் துறை நடவடிக்கையும் பணியிடைநீக்கமும் இவர்களது குற்றங்களுக்குத் தரப்படும் மறைமுக ஊட்டமாக அமையுமே தவிர, தண்டனையாக இருக்காது.





0 comments:
Post a Comment