Friday, May 30, 2008

நடிகை டி.பி.முத்துலட்சுமி மரணம்

தமிழில் முன்னூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த பழம்பெரும் நடிகை டி.பி.முத்துலட்சுமி நேற்று காலமானார். அவருக்கு வயது 77.

பொன்முடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் டி.பி.முத்துலட்சுமி. பின்னர் இவர், நாடோடி மன்னன், வீரபாண்டிய கட்டபொம்மன், இருவர் உள்ளம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் முன்னணி நகைச்சுவை நடிகையாக நடித்தார். தமிழக அரசின் கலைமாமணி விருதினைப் பெற்ற முத்துலட்சுமி, கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை மரணமடைந்த இவருக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தூத்துக்குடியைச் சேர்ந்த இவருக்கு குழந்தைகள் இல்லை.

கர்நாடக முதல்வராக எதியூரப்பா பதவியேற்றார்

கர்நாடகத்தின் முதல் பாஜக முதல்வராக இன்று பகல் 2 மணிக்கு எதியூரப்பா பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ராமேஸ்வர் தாக்கூர் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து 29 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதில் 5 சுயேச்சைகளும் அடக்கம். இந்த 29 பேருமே கேபினட் அமைச்சர்களாவர்.
விதான செளதா முன் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் முன் எதியூரப்பா பதவியேற்றுக் கொண்டார்

Thursday, May 29, 2008

தசாவதாரம் படத்திற்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி.

தசாவதாரம் படத்திற்கு எதிராக இரு இந்து அமைப்புகள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து விட்டது. படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் எதுவும் இல்லை, எனவே படத்தை திரையிட தடை இல்லை என்று உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

ஸ்ரீவைஷ்ணவ தர்ம சம்ரக்ஷன அமைப்பின் சார்பில் அதன் தலைவர் சாமி கோவிந்த ராமானுஜ தாசர் தாக்கல் செய்திருந்த மனுவில், தசாவதாரம் என்றால் விஷ்ணுவின் தசாவதாரம்தான் இந்துக்களுக்கு நினைவுக்கு வரும். அப்படிப்பட்ட புனிதமான பெயரை இப்படத்திற்கு வைத்தது தவறானதாகும்.
மேலும், இப்படத்தில் சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு பிரிவினருக்கும் இடையே கலவரம் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

புனிதமான ராமானுஜர் வேடத்திலும் கமல்ஹாசன் நடித்திருப்பதாக தெரிகிறது. மேலும் படத்தில் வன்முறைக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இது தேவையில்லாத பதட்டத்தையும், மோதலையும் ஏற்படுத்தும் என்று கூறியிருந்தார்.

கல்யாண சுப சமிதி சார்பில் அதன் தலைவர் சாந்த சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனுவில், இப்படத்தால் பெரும் கலவரம் ஏற்படும், சமூகத்தில் அமைதியின்மை ஏற்படும், சட்டம் ஒழுங்கு பாதிக்கும், கலவரமும் ஏற்படும். இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையிலான காட்சிகளை நீக்கி விட்டு படத்திற்கு அனுமதி தர வேண்டும் என்று கோரியிருந்தார்.

இரு மனுக்களையும் நீதிபதிகள் வெங்கட்ராமன், சத்யநாராயணன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. இன்று தீர்ப்பளித்தது.

நீதிபதிகளின் தீர்ப்பில், படத்தில் சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது போன்ற காட்சிகள் ஆட்சேபத்துக்குரியதாக இல்லை. அவதூறானதாகவும் இல்லை. சென்சார் போர்டு ஒரு படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கி விட்டார், தணிக்கை செய்து விட்டால், பொதுமக்கள் படத்தைப் பார்க்க அனுமதி வழங்கி விட்டால் அதில், நீதிமன்றம் தலையிட முடியாது. படம் திரையிடப்படுவதைத் தடுக்கவும் முடியாது.
கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது.
படத்தைப் பார்க்காமலேயே மனுதாரர்கள் அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருப்பது தேவையில்லாதது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவர்கள்தான் படத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால் பொதுமக்கள் படத்தைப் பார்க்க மிகவும் ஆவலாக காத்துள்ளனர் என்று கூறியிருந்தனர்.

தசாவதாரம் படத்திற்கு எதிரான இரு வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது தசாவதாரம் படக் குழுவினருக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே திட்டமிட்டபடி ஜூன் 6ம் தேதி படம் திரைக்கு வருவதில் எந்தத் தடங்கலும் இல்லை.

தசாவதாரத்தில் மல்லிகா ஷெராவத் கவர்ச்சிக்கு 'கட்'!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தசாவதாரம் படத்தை சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கைக்கு அனுப்பி வைத்தனர். படத்தைப் பார்த்த தணிக்கை வாரியம் சிறப்பாக வந்திருப்பதாக பாராட்டியது. அதேசமயம், மல்லிகா ஷெராவத் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சி தணிக்கை வாரிய உறுப்பினர்களை அதிர வைத்தது.

காரணம், துணி என்ற பெயரில் துண்டு துக்கடா காஸ்ட்யூமில் படு கிளாமராக காட்சி அளித்துள்ளார் மல்லிகா. ஒரு பாடலில் 9 இடங்களில் மல்லிகாவின் அசைவுகள் சற்று ஆபாசமாக உள்ளது. அவற்றை வெட்ட வேண்டும். அப்படிச் செய்தால் படத்திற்கு 'யு' சான்றிதழ் தரலாம் என்று கூறியுள்ளனர் தணிக்கை வாரிய உறுப்பினர்கள்.

படத்துக்கு 'யு' சான்றிதழ் பெற வேண்டும் என்பதில் படக்குழுவினர் உறுதியாக இருந்ததால், கட் செய்யச் சொன்னவற்றை கண்ணை மூடிக் கொண்டு தூக்கி விட்டனர். இருந்தாலும் கூட மல்லிகாவின் கவர்ச்சியில் பெரிய அளவில் குறைச்சல் இல்லை என்கிறார்கள்.
தற்போது படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்து விட்டது. இதையடுத்து படத்தை ஜூன் 6ம் தேதி திரைக்குக் கொண்டு வருவதில் தயாரிப்பாளர் தரப்பு மும்முரமாக உள்ளது.

Wednesday, May 28, 2008

தசாவதாரம் - நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு

தசாவதாரம் திரைப்படத்தில் மத உணர்வைத் தூண்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்றும், இதனை நீக்கிய பிறகே, படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் என்றும் சர்வதேச ஸ்ரீவைஷ்ணவ தர்ம சம்ரக்ஷனா என்ற அமைப்பின் தலைவர் ராமானுஜதாசர் என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அப்படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தசாவதாரம் படத்தில், மத மோதல் காட்சிகள் எதுவும் இல்லை என்றும், படத்தைப் பார்க்காமலேயே, மனுதாரர் குற்றம் சாட்டியிருப்பதாகவும் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த மனுதாரர், 100 கோடி ரூபாய் சம்பாதிக்க உலகம் முழுவதுமுள்ள 50 கோடி வைணவர்களின் கலாச்சாரத்தை அழிக்க நினைப்பதாகவும், தங்களது ஜீயர் மற்றும் நீதிபதிகள் இந்தப் படத்தைப் பார்த்து, சர்ச்சைக்குரிய பகுதிகள் இல்லை என்றால் மட்டுமே, தசாவதாரம் படத்தை திரையிட நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வெளியிடப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Tuesday, May 27, 2008

தசாவதாரத்தில் அதிப‌ர் புஷ்

முன்னணி இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், நடிகர் கமலஹாசன் பத்து வேடங்களில் நடித்த தசாவதாரம் திரைப்படம் 60 கோடி ரூபாய் செலவில் தயாராகி வருகிறது.
இதில் நடிகர் கமலஹாசன் தான் ஏற்கும் பத்து வேடங்களில் ஒரு வேடமாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ் கெட்டப்பில் நடித்துள்ளாதாக கூறப்படுகிறது. எனவே, தசாவதாரம் படத்தை புஷ் பார்ப்பதற்கான ஏற்பாடுள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆங்கில சப்-டைட்டிலுடன் தயாராகி வரும் தசாவதாரம் பிரிண்ட், அதிபர் புஷ்ஷுக்காக பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

Monday, May 26, 2008

கர்நாடக தேர்தலில் தோல்வி த‌ழுவிய‌ பிர‌ப‌ல‌ங்க‌ள்

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் பல முக்கிய பிரமுகர்கள் படுதோல்வி அடைந்துள்ளனர். காங்கிரஸ் மற்றும் பிற கட்சியைச் சேர்ந்த 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் தோல்வியைத் தழுவினர். தொடர்ந்து எட்டு முறை ஒரே தொகுதியில் வெற்றிபெற்ற முன்னாள் முதலமைச்சர் தரம்சிங் தோல்வியை சந்தித்தார். மேலும், அங்கு தமிழர்களுக்கு எதிராக அடிக்கடி போராட்டங்களை நடத்தி வரும் வாட்டாள் நாகராஜ் டெப்பாசிட்டை இழந்துள்ளார்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த நடிகர் அம்பரீஷ் மற்றும் முன்னாள் முதலமைச்சர் பங்கரப்பாவும் தோல்வி அடைந்தனர். மேலும், பங்காரப்பாவின் மகன்கள் குமாரபங்காரப்பா, மருபங்கரப்பா ஆகியோரும் படுதோல்வி அடைந்தனர். மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் சபாநாயகருமான கிருஷ்ணா பரிதாபமாக தோல்வி அடைந்தார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பிரபலங்களின் தோல்விகள் அம்மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எடியூரப்பா கர்நாடகத்தின் புதிய முதல்வர்..

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூடி பி.எஸ். எடியூரப்பாவை தங்களின் சட்டமன்றக் கட்சித் தலைவராக (முதல்வர்) தேர்ந்தெடுத்தனர். மேலும் அவர் வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த குமார், மாநில பாஜக தலைவர் சதானந்த கவுடா ஆகியோரும் பங்கேற்றனர். கூட்டத்தில் எடியூரப்பா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்காக எடியூரப்பாவின் வீட்டில் தலைவர்களும், தொண்டர்களும் குவிந்ததால் விழாக்கோலமாக காணப்பட்டது. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டதுடன் வீடு முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

சிங்கப்பூரில் ஆபாசத்துக்கு தடை‍ ஆன்-லைன் பயனாளர்கள் எதிர்ப்பு!

ஆபாச வீடியோக்களை உள்ளடக்கிய 2 இணையதளங்களுக்கு சிங்கப்பூர் அரசு அதிரடித் தடை விதித்துள்ளது.

நாட்டின் சமூக நலன் கருதி இந்த நடவடிக்கையே மேற்கொண்டதாக சிங்கப்பூர் ஊடக மேம்பாட்டு ஆணைய அதிகாரி ஜேசன் ஹோங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.



தடை செய்யப்பட்ட இணைய தளங்களில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்ததாக தெரிவித்துள்ள சிங்கப்பூர் அரசு, சம்பந்தப்பட்ட 2 இணையங்களின் பெயரையும் வெளியிட மறுத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



தற்போது தடைசெய்யப்பட்டுள்ள 2 இணையதளங்களை சேர்த்தால், அந்நாட்டில் தடை விதிக்கப்பட்ட ஆபாச தளங்களின் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூரின் அடுத்த தலைமுறை வளர்ச்சிக்கு இதுபோன்ற நடவடிக்கை இன்றியமையாதது என்று அந்நாட்டு அரசு தனது நடவடிக்கைக்கு நியாயம் கற்பித்துள்ளது.



ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆன்-லைன் பயனாளர்கள், இதுபோன்ற தடை தேவையற்றது என்றும், இந்நடவடிக்கை தங்களின் உரிமைகளை பறிக்கும் விதமாக உள்ளதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Sunday, May 25, 2008

க‌ர்நாடகாவில் ஆட்சிப் பொறுப்பேற்கிறது பாஜக


க‌ர்நாடக மா‌நில ச‌ட்ட‌சபைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, வரும் 28-ம் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறது.
அன்றைய தினத்தில், கர்நாடகா முதல்வராக பி.எஸ்.எடியூரப்பா பதவியேற்பார் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.


இம்மா‌நில‌த்தின் 224 தொகு‌திகளு‌க்கு‌ம் 3 க‌ட்ட‌ங்களாக நட‌ந்த தே‌ர்த‌லி‌ல் தனியொரு கட்சியாக பாஜக 110 இடங்களில் வெற்றி பெற்றது.
ஆட்சியமைப்பதற்கு அரு‌தி பெரு‌ம்பா‌ன்மை பெற 113 இட‌ங்க‌ள் தேவை என்ற நிலையில், அந்த எண்ணிக்கையை எட்ட 3 இடங்களே குறைவாக இருக்கிறது.
இந்நிலையில், இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற 4 சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவு தங்களிடம் உள்ளது என்றும், மே 28-ல் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவுள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் உறுதிபட தெரிவித்துள்ளது.


இந்தத் தேர்தலில் காங்கிரஸ் 80 இடங்களைக் கைப்பற்றியது. கர்நாடக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் என்ற வகையில், இந்தத் தோல்விக்கு தாம் பொறுப்பேற்பதாக எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.


தேவேகெளடா‌வி‌ன் மதசார்பற்ற ஜனதா தளம் 28 இடங்களைக் கைப்பற்றின. இதர கட்சிகளும் சுயேட்சைகளும் 6 இடங்களில் வெற்றி பெற்றன.


பாஜக முதன்முறையாக தென்னிந்தியாவிலுள்ள மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்திருப்பது கர்நாடகாவே.

ஜெயிக்கபோவது யாரு? காலை 10.30 ம‌ணி

க‌ர்நாடக மா‌நில ச‌ட்ட‌சபைத் தேர்தலில் பார‌திய ஜனதா க‌ட்‌சி 100 இடங்களிலும், கா‌ங்‌கிர‌ஸ் 71 இட‌ங்க‌ளிலு‌ம் மு‌ன்ன‌ணி‌யி‌ல் உ‌ள்ளன.

க‌ர்நாடக மா‌நில‌த்தில் 224 தொகு‌திகளு‌க்கு‌ம் 3 க‌ட்ட‌ங்களாக நட‌ந்த தே‌ர்த‌லி‌ல் ப‌திவான வா‌க்குக‌ள் இ‌ன்று காலை 8 ம‌ணி முத‌ல் எ‌ண்‌ணப்பட்டு வருகின்றன.

காலை 10.30 ம‌ணி நேர ‌நிலவர‌ப்படி, 214 இட‌ங்களு‌க்கான மு‌ன்ன‌ணி ‌நிலவர‌ங்க‌ள் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளன. இதில், பார‌திய ஜனதா க‌ட்‌சி ஓர் இடத்தில் வெற்றிபெற்றுள்ளது; 99 இட‌ங்க‌ளி‌ல் முன்னிலையில் உள்ளது.

கா‌ங்‌கிர‌ஸ் 71 இட‌ங்க‌ளிலு‌ம், தேவேகெளடா‌வி‌ன் மத‌ச்சா‌ர்ப‌ற்ற ஜனதா தள‌ம் 36 இட‌ங்க‌ளிலு‌ம் இதர க‌ட்‌சிக‌ள் 7 இட‌ங்க‌ளிலு‌ம் மு‌ன்ன‌ணி‌யி‌ல் உ‌ள்ளன.க‌ர்நாடக ச‌ட்டசபையி‌ல் உ‌ள்ள 224 இட‌ங்க‌ளி‌ல், அரு‌தி பெரு‌ம்பா‌ன்மை பெற 113 இட‌ங்க‌ளை‌க் க‌ை‌ப்‌ப‌ற்‌றியாக வே‌ண்டு‌ம்.

Saturday, May 24, 2008

கர்நாடகத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை..


கர்நாடக மாநில சட்டசபைக்கு 224 தொகுதிகளில் 3 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (ஞாயிறு) எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.


பெங்களூரு உட்பட கர்நாடக மாநிலம் முழுவதும் மொத்தம் 48 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுவதாகவும், இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி எம்.என். வித்யா சங்கர் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்திற்கும், வாக்கு எண்ணப்படும் மையங்களுக்கும் இடையே தகவல் தொடர்பு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருப்பதால் முடிவுகள் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு விடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களே பயன்படுத்தப்பட்டிருப்பதால் காலை 11 மணியளவில் பெரும்பாலான முடிவுகள் வெளியாகி விடும் என்று தெரிகிறது.

பெங்களூரு சர்வதேச விமான நிலையம்


கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு மாவட்டத்தில் உள்ள தேவனஹள்ளியில் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், தனியார் நிறுவனத்துடன் இணைந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் சர்வதேச விமான நிலையத்தை 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டிமுடித்துள்ளன. இந்த விமான நிலையம் பெங்களூரில் நகரில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுக்கு ஒரு கோடியே பத்து லட்சம் பயணிகள் வந்து செல்லும் அளவுக்கு பல்வேறு நவீன வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் அமரும் வகையில் இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.


பெங்களூரு சர்வதேச விமான நிலையம் 24 மே ந‌ள்ளிர‌வு 0.01 ம‌ணியிலிருந்து செய‌ல்ப‌ட‌த்தொட‌ங்கின்றது.













Friday, May 23, 2008

தேர்தல் திருவிழா 2008

காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசு 5வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்கு மேல் மக்களவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசாமி கூறியிருக்கிறார். டெல்லியில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர், மறுசீரமைக்கப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் மக்களவை தேர்தலை நடத்த தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளதாக கூறினார்.

அஸாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களை தவிர ஏனைய அனைத்து மாநிலங்களிலும் தொகுதி சீரமைப்பு பணிகள் முடிவடைந்து விட்டன.

தொகுதி சீரமைக்கப்பட்ட பின்னர் முதல்முதலாக, கர்நாடகாவில்தான் தற்போது தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

பிறந்தநாள் கொண்டாடலாம் வாங்க..

தனது பிறந்தாள் விழாவை கொண்டாட வேண்டாம் என்று திமுகவினரை அக்கட்சித் தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னையில் வெளியிட்ட‌ அறிக்கையில், தனது பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி அன்று சென்னையில் தான் இருக்கப்போவதில்லை என்றும், எனவே தன்னை சந்திக்க வருவதை தவிர்க்கும்படியும் கட்சினருக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். தனக்கு ஏற்பட்டுள்ள உடல் மற்றும் மனச்சோர்வு காரணமாக பார்வையாளர்களை சந்திப்பதை தவிர்த்து விட்டதாகவும், ஓய்வுக்காக தான் ஒரு வாரம் வெளியூர் செல்லவிருப்பதாகவும் கருணாநிதி அறிக்கைவிடுத்த முதலமைச்சர் கருணாநிதி இப்போழுது அதை மாற்றிக்கொண்டார்.

இதனை கவிதை வடிவில் வெளியிட்ட முதல்வர் கருணாநிதி, நிதியமைச்சர் க.அன்பழகன், திராவிடக் கழகத் தலைவர் வீரமணி உள்ளிட்டோர் கேட்டுக்கொண்டதுக்கு இணங்க, பிறந்தநாள் கொண்டாட ஒப்புக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக கருணாநிதி எழுதியுள்ள கவிதை:

முத்தமிழ் வித்தகராம் நல்லோர்க்கும்முதுபெரும் புலமையில் வல்லோர்க்கும்முரசு கொட்டி மொழிப்போரில் அணிவகுத்தோர் அனைவருக்கும்அரசொன்று வருமென்று கருதிடாமல் அறப்போர்களிலேஆவிதனை அர்ப்பணித்தோர்க்கும்; அகவை எண்பத்தி ஐந்தில்அன்பு குழைத்து, அய்யன்மீர்! வீர வணக்கம் செலுத்துகின்றேன்.
வழித்தோன்றல்களாய் அவர்க்கு வாய்த்த குடும்பத்தார்க்கும்கழிபேருவகைப் பொங்கி வழிந்திட நன்றிகளைக் குவிக்கின்றேன்.அலை அலையாய்ப் பெருகி அணி வகுத்துத் திராவிட இயக்கஅரண் காத்திட ஆர்த்தெழாமல் அன்றைக்கு அயர்ந்திருப்பின்தீரா விடமன்றோ நம்மினத்தைத் தீர்த்துக் கட்டியிருக்கும்ஈரோடு சிங்கமன்றோ எழுந்து முழங்கிற்று!
போராட வா தம்பியென்று காஞ்சியின் புறநானூறும் அழைத்தபோதுவேரோடு தமிழினம் வீழாமல் காப்பதற்குவெகுண்டெழுந்து வந்தவர்களில் ஒருவன் நான்!பகுத்துணர்ந்து பல்லாண்டுகளாக இனமுழக்கம் செய்கின்றபண்பாளர் எனக்கு மூத்த பேராசிரியர்பழகு தமிழில் ஆணையிட்டு அழைத்த பிறகும்பகுத்தறிவுப் பாசறையாம் பழைய தாய்க் கழகத்து வீரமணிக்குரலும் விரிவானமாய் மனம் தோய்த்துபல்லாயிரம், பல லட்சம் உடன் பிறப்பாளர்பாசத்தை வெள்ளமாய்ப் பாய விட்டுப்"பணிந்திடுக என் அன்புக்கு!" என ஆணையிட்ட பின்னும்துணிந்து நான் துண்டிக்க முடியுமோ உடன்பிறப்புத் தொடர்பையெல்லாம்;அதனாலே பாவேந்தர் பாடல் வரி போல"தொந்தரவுக்குள்ளே நான் சுகம் காண" ஒப்பி விட்டேன்!உன் வாழ்த்தினையேற்றுஎன் வணக்கமும் வாழ்த்தும் வட்டியும், முதலுமாய் வழங்குதற்கே!
என்று கூறியுள்ளார் முதல்வர். இதையடுத்து முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் வருகிற ஜூன் 3ம் தேதி அன்று முதலமைச்சர் கருணாநிதிக்கு 85-வது வயது தொடங்குகிறது. அவரது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாட திமுகவினர் தற்போதே ஆயத்தமாகி வருகின்றனர்.

Thursday, May 22, 2008

இறுதி ஆண்டில் ஐமுகூ அரசு!

பணவீக்கம் மற்றும் தொங்கலில் நிற்கும் அணு ஆயுத ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுடன் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இன்று தனது 5வது மற்றும் இறுதி ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதில் திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி மற்றும் இடதுசாரிகள் போன்ற கட்சிகள் முக்கியக் கூட்டணி கட்சிகளாக உள்ளன.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு, கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதில், விவசாயிகளுக்கான கடன்கள் தள்ளுபடி, கிராமப்புறங்களில் வேலை உத்தரவாத திட்டம் மற்றும் மகளிர் மசோதா தாக்கல் செய்யப்பட்டது போன்றவை முக்கிய அம்சங்களாகும்.

மேலும் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலை பெற்றதும் குறிப்பிடத்தக்க சாதனையாக உள்ளது.

எனினும், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு இடதுசாரிகள் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அந்த திட்டம் தொடர்ந்து தொங்கலில் நிற்கிறது.அதேபோன்று சேது சமுத்திர திட்டத்திற்கும் அதே கதிதான்.

இந்நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது 4 ஆண்டுகால ஆட்சியை பூர்த்திசெய்து, இன்று 5 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இதையொட்டி, பிரதமர் மன்மோகன் சிங் முக்கிய அறிக்கை ஒன்றை இன்று வெளியிடவுள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தனது இறுதியாண்டு ஆட்சியில் மத்திய அரசு மேலும் பல திட்டங்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Wednesday, May 21, 2008

ஜூன் 6 `தசாவதாரம்' ரிலீஸ்

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வந்த `தசாவதாரம்' ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. அடுத்த மாதம் (ஜூன்) 6-ம் தேதி தசாவதாரம் வெளியிடப்படுவதாக படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இப்படத்தின் சிறப்பம்சங்கள்:

  1. விஷ்ணுவின் 10 அவதாரங்களைக் குறிக்கும் விதமாக பத்து மாறுபட்ட தோற்றத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து, கே.எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ள படம் `தசாவதாரம்'.
  2. இந்தப் படத்தை வேறுவேறு நாடுகளில், பல்வேறு கால கட்டங்களில் நடப்பது போன்ற கதையை எடுக்க வேண்டி வந்ததாலேயே படம் முடிவதற்கு 2 ஆண்டுகள் ஆகி விட்டதாக ரவிச்சந்திரன் குறிப்பிட்டார்.
  3. இதுவரை இந்த அளவு பிரிண்டுகள் எந்தப் படத்திற்கும் போடப்பட்டதில்லையாம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் சுமார் ஆயிரம் பிரிண்டுகளுடன் தசாவதாரம் வெளியிடப்படுகிறது.
  4. அமெரிக்காவில் 60 மையங்களிலும், மலேசியாவில் 70 மையங்களிலும், சிங்கப்பூரில் 5, இலங்கையில் 25, துபாயில் 8, தென் ஆப்பிரிக்காவில் 4, கனடாவில் 18, லண்டனில் 25, ஆஸ்திரேலியாவில் 5, பிரான்சில் 2 மையங்களிலும் முதல் முறையாக ஒரு இந்திய திரைப்படம் உலக அளவில் அதிக மையங்களில் திரைக்கு வருகிறது.
  5. தசாவதாரம் படத்தைப் பொறுத்தவரை மிகவும் ரசிக்கக்கூடிய வகையில் இருக்கும் என்று கூறிய ஆஸ்கார் ரவிச்சந்திரன், படத்தின் கதையைக் கேட்டதுமே தாம் தயாரிப்பதற்கு ஒப்புக் கொண்டதாகவும், கமலைத் தவிர வேறு எந்த நடிகராலும் இதுபோன்ற பங்களிப்பைத் தந்திருக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
  6. தசாவதாரம் வெளியான பிறகு, சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வரலாற்றை ஏற்படுத்தும் என்றும், இப்படம் ஒரு சினிமாவுக்கே ஒரு என்சைக்ளோபீடியாவாக அமையும் என்றும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் பெருமையுடன் கூறுகிறார்.
  7. தசாவதாரம் படத்தை தயாரிக்க எனக்கு வாய்ப்பளித்த கமலுக்கு தனது நன்றியையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.




Tuesday, May 20, 2008

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய், தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் கலந்துகொண்டனர்.







கொட நாட்டில் ஜெயலலிதா நடனம்..


அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கொடநாடு எஸ்டேட்டில் ஏப்ரல் 9ம் தேதி முதல் கோடை விடுமுறையைக் கழித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கொடநாடு அருகே உள்ள ஹாலமலை என்ற இடத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதர் கோவிலில் படுகர் இனத்தவர் கூடி வழிபட்டனர்.

இந்த விழாவில் ஜெயலலிதாவும் கலந்து கொண்டார். இதற்காக அவர் காரில் வந்தபோது படுகர் இனத்தவர், தங்களது பாரம்பரிய முறைப்படி ஜெயலலிதாவை வரவேற்றனர். அவருக்கு தங்களது பாரம்பரிய உடையையும் கொடுத்து அணிந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொண்டனர். ஜெயலலிதாவும் வெள்ளை நிற மேலங்கியை அணிந்து கொண்டார்.

பின்னர் கோவிலுக்குள் ஜெயலலிதா அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு விசேஷ வழிபாடு நடத்தப்பட்டது. படுகர் இன ஸ்லோகங்களை சொல்லி படுகர் இன பூசாரிகள் பூஜை செய்தனர். பின்னர் ஜெயலலிதாவுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.


பின்னர் வெளியே வந்த ஜெயலலிதா கோவிலுக்கு வெளியே போடப்பட்டிருந்த பந்தலின் கீழ் இருக்கையில் அமர்ந்தார். அப்போது படுகர் இனப் பெண்கள் கூட்டமாக கூடி ஜெயலலிதா முன்பு நடனம் ஆடினர். அந்த ஆட்டத்தை சிறிது நேரம் ஜெயலலிதா ரசித்துப் பார்த்தார்.


இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் இருக்கையிலிருந்து எழுந்த ஜெயலலிதா, நடனமாடிக் கொண்டிருந்த படுகர் இனப் பெண்களுடன் சேர்ந்து தானும் நடனம் ஆடத் தொடங்கினார்.


முகம் நிறைய உற்சாகத்தோடும், புன்னகையோடும், கைகளை மேலே உயர்த்தியபடி, படுகர் இன நடனத்தை ஜெயலலிதா ஆடியதை அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான படுகர் இனத்தவர்களும் உற்சாகமாக வரவேற்று அவர்களும் ஆடினர். இதனால் அந்த இடமே விழாக்கோலம் பூண்டது.


சில நிமிடங்கள் நடனமாடிய ஜெயலலிதா படுகர் இனத்தவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.


நடனடமாடிய அனுபவம் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயலலிதா கூறுகையில், படுகர் இனத்தவருடன் சில நிமிடங்களை செலவிட்டது மறக்க முடியாது அனுபவமாக இருந்தது. அவர்களுடன் நடனமாடியது வித்தியாசமான அனுபவம் என்றார்.

Monday, May 19, 2008

டெண்டுல்கர் மரணம்!!

மும்பை பிரபல நாடக, கதை ஆசிரியர் விஜய் டெண்டுல்கர், மே 19 அன்று காலை புனேயில் காலமானார். அவருக்கு வயது 80. கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டுவந்த டெண்டுல்கர் புனேயில் ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாகி, கடந்த ஞாயிற்றுக்கிழமை சுய நினைவை இழந்தார். அவரது மறைவு செய்தி அறிந்தவுடன் மராத்திய நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், மருத்துவமனைக்கு வந்து அஞ்சலி செலுத்தினர். விஜய் டெண்டுல்கர் பல நாடகங்களுக்குக் கதை எழுதியுள்ளார். இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். விஜய் டெண்டுல்கர், மறைந்த திரைப்பட நடிகை பிரியா டெனண்டுல்கரின் தந்தையாவார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு சென்னையில் பிரசாரம்

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடக்கிறது. ஜனநாயக கட்சியின் வேட்பாளர் தேர்தலில் போட்டியிடும் ஒபாமாவுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். சென்னை கோட்டூர்புரம் பாலம் அருகே பிரசாரம் செய்கின்றனர்.




Friday, May 16, 2008

சோலார் பவர் 'பிரா'

உள்ளாடைகளில் நவீன விஷயங்களையும், அம்சங்களையும் புகுத்துவது தான் தற்போதைய பேஷன் போல... வைரங்கள் பதித்த 'பிரா'... ஒளிரும் பிரா (இரவு நேரத்தில் கண்ணைப் பறிக்குமாம்) போன்றவற்றை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஜப்பானியர்கள் தயாரித்துள்ள புதிய 'பிரா' தகவல்தொழில்நுட்பத் துறையில் மைல் கல்லாக அமையப் போகிறது.



ட்ரையம்ப் இண்டர்நேஷனல் (Triumph International) என்ற ஜப்பான் நிறுவனம் சார்பில் டோக்கியோவில் நேற்று சோலார் பவர் 'பிரா': அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் சிறப்பம்சங்கள்:
  1. இந்த பிரா மூலம் ஐ-பாட், செல்போன் மற்றும் இதர மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதற்காக பிராவுடன், மாற்றக்கூடிய சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

  2. வெளியூர் அல்லது தொலைதூரப் பயணம் செல்லும் பெண்கள், தங்களுடைய மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்வதற்காக மின்சாரத்தை தேடி அலைய வேண்டியதில்லை. பிராவில் உள்ள வசதியை பயன்படுத்தி எளிதில் சார்ஜ் செய்து கொள்ள முடியும். ரீசார்ஜ் செய்யத் தேவையில்லாத நேரத்தில் சோலார் பேனல்களை தனியாக கழற்றி வைத்துக் கொள்ளலாம் என்பது இதன் மற்றொரு சிறப்பம்சம்.

  3. இதேபோல் இதில் தண்ணீர் சேமித்து வைக்கும் வசதியையும் அந்நிறுவனம் கூடுதலாக வழங்கியுள்ளது. இதற்காக 2 பாலிதீன் கவர்கள் 'பிரா'வின் பக்கவாட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பிராவை அணிந்து கொள்ளும் பெண்கள், பாலிதீன் கவர்களில் உள்ள ஸ்டாரா போன்ற பொருளைப் பயன்படுத்தி நீரைப் குடிக்க முடியும்.


Thursday, May 15, 2008

ஏவுகணை திட்டத்தி‌ற்கு தலைமையேற்கும் முதல் பெண்!

இந்தியாவின் ஏவுகணைத் திட்டத்தின் தலைமைப் பொறுப்பிற்கு முதன் முதலாக ஒரு பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் பணியாற்றும் 45 வயது பெண்மணி டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அணுத் திறன் ஏவுகணைத் திட்டத்தின் தலைவர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.


தற்போது 3000 கிமீ. இலக்குகளை சென்று தாக்கும் அக்னி ஏவுகணைத் திட்டத்தில் உதவி திட்ட இயக்குனராக இருந்து வரும் டெஸ்ஸி தாமஸ், அணுத்திறன் வாய்ந்த அக்னி ஏவுகணைத் மேம்பாட்டுத் திட்டத்தில் திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்த திட்டம் குறித்து கூறிய டெஸ்ஸி தாமஸ், இதுவும் ஒரு ரகசியமான திட்டம்தான், இது அக்னி-2 என்று அழைக்கப்படுகிறது. தேசத்தின் பாதுகாப்பில் எனது பங்கு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

Wednesday, May 14, 2008

'ஹின்ட்ராப்' தலைவர்களை விடுவிக்க மறுப்பு

கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக போராடியதால் சிறையில் அடைக்கப்பட்ட 'ஹின்ட்ராப்' தலைவர்கள் ஐந்து பேரை விடுவிக்க மலேசிய நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மலேசியாவின் மொத்த மக்கள் தொகையில் 7 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினராக உள்ளனர்.இதில் பெரும்பாலானோர் தமிழர்கள்.
இந்நிலையில், கடந்த ஆண்டு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இந்திய வம்சாவளியினருக்கு சம் உரிமை அளிக்க கோரி இந்து உரிமைகள் நடவடிக்கைகள் குழு ('ஹின்ட்ராப்')வைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசுக்கு எதிராக போராட்டத்தை தூண்டிவிட்டதாக 'ஹின்ட்ராப்' தலைவர்கள் 5 பேர் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தங்களை விடுவிக்க கோரி 'ஹின்ட்ராப்' தலைவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை , உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இதனையடுத்து அந்நாட்டின் உச்ச நீதிமன்றமாக கருதப்படும் ' ஃபெடரல் கோர்ட்' டில் இதே கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், உயர் நீதிமன்றம் விடுதலை கோரிக்கையை நிராகரித்ததில் தவறில்லை எனக் கூறி, அவர்களது மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

இந்நிலையில், தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு கோரி 'பெடரல் கோர்ட்'டில் மற்றொரு மனுவை தாக்கல் செய்ய இருப்பதாக 'ஹின்ட்ராப்' தலைவர்களின் வழக்கறிஞர் கர்பல் சிங் தெரிவித்தார்.

குறுகிய காலத்தில் அதிகமாகப் பணம்!!!

அண்மைக்காலமாக செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் பிரதான இடத்தைப் பிடித்திருக்கும் விஷயம் தங்கக்காசு, எம்எல்எம், ஆன்லைன் வேலைவாய்ப்பு போன்றவையே. குறுகிய காலத்தில் அதிகமாகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள் இன்று பல்கிப் பெருகிவிட்டனர்.

சரி... அதற்கு என்ன வழி..? இருக்கவே இருக்கிறது எம்எல்எம் போன்ற வியாபார உத்திகள். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும்பாலானோர் இந்த எம்எல்எம் மோகத்தில் திரிந்தனர். குறைந்தது 6 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதன்பிறகு சங்கிலித் தொடர் முறையில் லாபம் கொட்டும் என்றார்கள். இதை நம்பி ஏராளமானோர் பணத்தைக் கொட்டி பினாயிலையும், அழகு சாதன கிரீம்களையும் வாங்கிக் குவித்தனர். ஆனால், விற்பதற்குத்தான் வழியில்லை.

இதேபோல நிதி நிறுவனங்களில் மோசடி செய்து அதில் சிக்கியவர்களும் பலர். இந்நிலையில், மேலும் மேலும் அதிக சம்பாத்தியத்துக்கு வழி என்ன என்று சிந்திப்பவர்களுக்காகவே புதிது புதிதாக விஞ்ஞானரீதியிலான மோசடி அதிகரித்து வருகிறது.

இந்த வரிசையில் வெகு குறைந்த காலத்தில் புற்றீசல் போல தனியார் நிதி நிறுவனங்களும், காப்பீட்டு நிறுவனங்களும் அளவுக்கு அதிகமாக பெருகி வருகின்றன. குறைந்த வட்டி, அதிக கடன் தொகை மேலும் குறிப்பிட்ட தொகையை மொத்தமாக முதலீடு செய்தால் இத்தனை ஆண்டுகளில் அபார லாபம் என மடி கணினி (லேப்டாப்) மூலம் காட்டுவதும், ஆதாரங்களுக்காக பல அறிக்கைகளை காட்டுவதும் வழக்கமாகிவிட்டன.

முன்பெல்லாம் காப்பீடு என்றால் எல்ஐசி மட்டும்தான். அரசு ஊழியர்கள், மாத வருவாய் பெறுபவர்கள் வரிவிலக்கு போன்ற விஷயங்களுக்காக பாலிசியை எடுத்து வந்தனர். மேலும் சிலர் கிசான் விகாஸ், இந்திர விகாஸ் போன்ற பத்திரங்களை தங்களது சுயநலத்துக்காகவும், பாதுகாப்புக்காகவும் பெற்று வந்தனர். இதில் முதலீடு என்பது இரட்டிப்பாக நீண்ட காலம் காத்திருக்க வேண்டும் என்பதால் தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

ஆனால், இரட்டை மடங்கு தொகைக்காக கிட்டத்தட்ட 8 ஆண்டுகாலம் வரை காத்திருப்பதை பலர் விரும்பவில்லை. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட பல தனியார் நிறுவனங்கள் புதிய காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கின.

இன்று சாலைக்கு சாலை, வீட்டுக்கு வீடு பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கையில் மடி கணினியை வைத்துக் கொண்டு கவர்ச்சிகரமான திட்டங்களைக்கூறி ஏறக்குறைய மூளைச்சலவை செய்துவிடுகின்றனர். திட்டத்தில் சேர்பவர்கள் குறைந்த பட்சம் பத்தாயிரம் முதல் முதலீடு செய்யத் தயாராகி விடுகின்றனர்.

அப்புறம் என்ன... ஆண்டொன்று போன கதைதான். முதலில் நீங்கள் குறிப்பிட்ட தொகையை செலுத்திவிட்டு ஹாயாக ஓய்வெடுங்கள். மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என ஒரே போடு... வாடிக்கையாளர் வீழ்ந்தார்.

பதினைந்து ஆண்டு கழித்துப் பாருங்கள்... உங்களுக்கு 30 லட்சத்திலிருந்து பணம் கொட்டப்போகிறது என்று கூறியதை நம்பி கணவன், மனைவி, குழந்தைகள், உறவினர் வட்டம் என இருந்த சேமிப்பு முதலீடாகி விடுகிறது. அதன்பிறகு... அதுதான் தெரியவில்லை.

இப்படித்தான் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு தேக்கு மரக்கன்றை நடுங்கள்...நீங்கள்தான் லட்சாதிபதி என்றார்கள். கடைசியில் ஏமாற்றம்தான்.

எனவே, சேமியுங்கள். அது சிறந்த வழிதான். ஆனால், அரசு சார்ந்த முறையான பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யுங்கள். உங்கள் பணத்துக்கு உத்தரவாதம் இருந்தால் தாராளமாகப் பணத்தைச் செலுத்துவதில் தவறில்லை.
நன்றி: தினமணி

Tuesday, May 13, 2008

இந்தியாவில் ஐ-போன் ‍ ஏர்டெல்



இந்தியாவின் முன்னணி செல்போன் சேவை நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல், இந்திய வாடிக்கையாளர்களுக்காக இந்தாண்டு இறுதியில் இணையதளம், மின்னஞ்சல், கேமரா, மியூசிக் பிளேயர் உள்ளிட்ட வசதிகளை உள்ளடக்கிய ஐ-போன்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக ஐ-போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் உடன், பார்தி ஏர்டெல் நிறுவனம் கூட்டு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக, ஏர்டெல் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 65 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட ஏர்டெல் நிறுவனம், இந்தாண்டு தீபாவளிப் பண்டிகையன்று ஐ-போன் விற்பனையை துவக்கும் என அந்நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டாடாவின் நானேவுக்கு போட்டி‍


டாவின் நானேவுக்கு போட்டியாக பஜாஜ் நிறுவனமும் பிரான்சின் ரெனால்ட், ஜப்பானின் நிஸ்ஸான் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ரூ. 1 லட்சத்துக்கு கார்களை தயாரிக்கவுள்ளது. இந்த கார் 2011ம் ஆண்டு விற்பனைக்கு வரும்.
இந்த கார்கள் ரூ. 1 லட்சம் விலையுடன் கூடிய சிறிய ரக கார்களாக இருக்கும் என பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காருக்கு யு.எல்.சி. என இப்போதைக்கு 'கோட் நேம்' சூட்டப்பட்டுள்ளது. பின்னர் உரிய பெயர் தேர்வு செய்யப்படும்.

இந்த கார் தயாரிப்புக்காக மகாராஷ்டிர மாநிலம் சக்கானில் புதிய தொழிற்சாலையை பஜாஜ் கட்ட ஆரம்பித்துள்ளது.வருடத்துக்கு 4 லட்சம் கார்களை தயாரிக்கும் வகையில் மிக பிரமாண்டமான தொழிற்சாலையாக இது உருவாக்கப்பட்டு வருகிறது.

இன்னும் 3 ஆண்டுகளில் கார் தயாரிப்பு தொடங்கும். 2011ம் ஆண்டில் கார் விற்பனை தொடங்கும். இந்தியா தவிர பிற நாடுகளுக்கும் இந்த கார்களை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Monday, May 12, 2008

வலைப்பதிவாளர்களுக்கான டிப்ஸ்!!

'பிளாக்ஸ்' (Blogs)... இணையதளத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதிகம் பரிச்சயமான ஆங்கிலவார்த்தை இது. யார் வேண்டுமானாலும் தங்களுக்கென ஒரு Blog-ஐ (வலைப்பதிவுத்தளம்) உருவாக்கிக் கொள்ளலாம்.
உலகம் முழுதும் பல லட்சம் பேர் வலைப்பதிவுகளில் தீவிரமாக எழுதி வருகின்றனர். இதில் உங்கள் எழுத்துக்களுக்கான வாசகர்களை தக்கவைப்பது சற்று கடினமான காரியம் தான்.
நீங்கள் பிரபலமானவராக இருந்தால், உங்கள் வலைத்தளத்தில் பாட்டி வடை சுட்ட கதையை எழுதினால் கூட நிறைய பேர் வந்து படிப்பார்கள். உங்களை யாரென்றே தெரியாத போது நீங்கள் அர்த்தமுள்ள விஷயங்களை படு ஆழமாக அலசினாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். எழுதுவதற்கு முன் ஒரு சிறிய ஆராய்ச்சியை மேற்கொண்டால் நீங்கள் சொல்ல வருவதை ஏற்கன்வே பலர் கூறியிருப்பார்கள் என்பதை அறியலாம். யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்றாகிவிட்ட பிறகு மோசமான எழுத்துக்களும் வலைப்பதிவுத் தளங்களில் தற்போது குப்பை லாரி போல் குவிந்து வருகிறது.
ஆன்லைனில் கிடக்கும் விஷயதாரங்களில் உங்கள் எழுத்திற்கென்று ஒரு பிரத்யேக கும்பலை திரட்டுவது என்பது கடினம்தான். இருப்பினும் கீழ்வரும் டிப்ஸ்களை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்:
  1. எதைப்பற்றி சொல்ல வருகிறீர்கள் என்பதை விளக்கமாக கூறி விட வேண்டும். உங்கள் சொந்த வாழ்க்கையின் சிறுசிறு தகவல்களை எல்லோரும் விரும்பிப் படிப்பார்கள் என்று கூற முடியாது. உங்களுக்கு அது சுவையாக தெரியலாம். ஆனால் வாசகர்கள் உங்களைப் பற்றிய சொந்த விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை.
  2. உங்களுக்கு ஆர்வமுள்ள துறையில் அனைத்து விவரங்களையும் உங்கள் விரல் நுனியில் வைத்திருப்பது அவசியம். மேற்கோள் காட்டும்போதும், புள்ளி விவரங்களை அளிக்கும்போதும் அதனை எங்கிருந்து பெற்றீர்கள் என்பதை குறிப்பிடுவதால் உங்கள் வலைத்தளத்திற்கு நம்பகத்தன்மை கூடும். சீரான வலைப்பதிவாளர் என்ற பெயரை வாசகர்களிடையே உருவாக்க உங்களின் அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  3. வாசகர்களின் உண்மையான நம்பகத்தை பெற நீங்களே ஒரு சிறந்த வாசகராக இருக்க வேண்டும். உங்கள் சொந்தக் கருத்தை தெரிவிக்கும் போது, அது உங்கள் சொந்தக் கருத்து தான் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். உங்களை நம்பி ஒருவர் உங்கள் எழுத்துக்களை மேற்கோள் காட்டலாம். எனவே அவர்களுக்கு நீங்கள் நியாயமாக நடந்து கொள்வதே உள்ள மரியாதையை வாசகர்கள் மட்டுமின்றி வலைப்பதிவாளர்களிடம் அதிகரிக்கும்.
  4. வாசகர்களின் நேரம் பொன்னானது. சொல்ல வரும் விஷயத்தை பளிச்சென்று கூறாமல் வளவளவென்று இழுக்கக் கூடாது. ஒரு விஷயம் எழுதத் தகுந்ததா என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், அதன் பிறகே அதை வலைப்பதிவில் தெரிவிக்க வேண்டும். வார்த்தைகளை சுவையாக கையாள வேண்டும். திரும்பத் திரும்ப ஒரே சொல்லை பல இடங்களில் எழுதுவதை தவிர்ப்பது நல்லது.
  5. உலகம் முழுவதும் விழுந்து புரளும் தினசரி செய்திகளையும், மக்கள் அன்றாடம் அரைத்துத் தள்ளும் மாவையே நீங்களும் அரைக்காமல், எந்த ஒரு விஷயத்திலும் உள்ள அசலான செய்திகளை வாசகர்களுக்கு கொடுக்கவும். ஆனால் வெறும் செய்தியாக இல்லாமல் இது குறித்த உங்கள் கருத்துகள், பரிந்துரைகள், பார்வை ஆகியவற்றை தைரியமாக குறிப்பிடுவது வலைப்பதிவுகளில் மிகவும் அவசியம். நீங்கள் குறிப்பிடும் ஒவ்வொரு விஷயமும் வாசகர்களுக்கு மதிப்பை கூட்டுவதாக இருக்கவேண்டும்.
  6. சீராக தொடர்ந்து எழுதி வர வேன்டும். ஒரு சிலர் தொடர்ந்து 10 நாட்களுக்கு வலைப்பதிவில் எழுதித் தள்ளுவார்கள் பிறகு 6 மாதங்களுக்கு காணாமல் போய் விடுவார். இடைவேளி அதிகமாக இருந்தால் வாசகர்களிடம் ஒரு சிறு மன்னிப்புடன் புதிய பதிவை இடலாம்.
  7. எழுத்துப் பிழைகளை தவிர்ப்பது நலம். ஏனெனில் இதனால் அர்த்த மாறுபாடுகள் ஏற்பட்டு பெரும் பிரச்சனைகள் ஏற்படும்.

தற்போது பல நிறுவனக்களில் சோஷியல் நெட்வொர்க்கிங் தளம் மற்றும் வலைப்பதிவு தளங்களை பணி நேரத்திலேயே வாசிக்க அனுமதி தரும் ஜனநாயகப் போக்கு இருந்து வருவதால், உங்கள் எழுத்திற்கு உடனடியாக எதிர்வினைகள் வரும் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

விளம்பரத்திற்காக... ஒரு இணையதளம்(!)

பிரிட்டனில் படித்து வளர்ந்த உங்கள் மகனுக்கு தமிழக கிராமப்பெண்தான் தேவை என்று வைத்துக் கொள்வோம் இதற்கு நீங்கள் தமிழ் நாளிதழில் விளம்பரம் கொடுக்கவேண்டும். இவையெல்லாம் எப்படி சாத்தியம்? இதை சாத்தியமாக்க உருவாக்கப்பட்டது தான் அட்வர்டைஸ்மென்ட் இந்தியா.காம்
இந்த இணையதளம் இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி பத்திரிக்கைகள் மற்றும் பிராந்திய மொழியின் அனைத்து பத்திரிக்கைகளுடனும் கூட்டு கொண்டுள்ளது. உலகில் எங்கிருந்தாலும் இந்த இணையதளம் மூலம் உங்கள் விளம்பரத்தை இந்தியாவில் மக்கள் கண்களில் படும்படி பதிவு செய்ய முடியும்.
அனைத்து வகையான மொழிப் பத்திரிக்கைகளுடனும் தொடர்புடைய இவ்வளவு பெரிய விளம்பர இணையதளம் போன்ற மற்றொரு இணையம் இல்லை என்றே கூறலாம். அனைத்து வகையான விளம்பரங்களையும் ஏற்கும் இந்த இணையதளத்தில், கட்டணம் செலுத்தவும் எளிதான வழிமுறைகளே கையாளப்படுகிறது. கட்டணம் செலுத்தப்பட்டவுடன் 5 நாட்களில் நீங்கள் விரும்பிய பத்திரிகையில் உங்கள் விளம்பரம் வரும் என்று உறுதியும் அளிக்கப்படுவது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

Friday, May 9, 2008

பிரபலமாகி வரும் நுண் வலைப்பதிவுகள்!

வலைப்பதிவுகள் (பிளாக்) இன்றைய இணையதள பொருளடக்கங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றிருக்கும் வேளையில் மரபான வலைப்பதிவுத் தளங்களைக்காட்டிலும் ஃபாஸ்ட் ஃபுட் போன்ற நுண்வலைப்பதிவுகள் தற்போது தலைதூக்கத் துவங்கியுள்ளன. "சிறியது எப்போதும் அழகானது" என்று கூறுவார்கள். அதுபோன்ற ஒரு முழக்கத்துடன்தான் இந்த நுண் வலைப்பதிவுத் தளங்கள் இயங்குகின்றன. ஷாப்பிங் செல்லும்போது, ரயில்களில், கார்களில் செல்லும்போது என்றில்லாமல் நினைத்தவுடன் ஒன்றை எழுதி சிறியதாக வெளியிடும் இந்த நுண்வலைப்பதிவுகளுக்கு தற்போது கிராக்கி அதிகரித்துள்ளது. நுண்வலைப்பதிவுகள் என்பது உங்கள் சொந்த பிளாக்கில் சிறு செய்தித் துளிகளை வெளியிட்டு அதனை நுண்வலைப்பதிவுத் தளங்களில் பதிவு செய்வது. மைக்ரோ பிளாக்கிங் என்று அழைக்கப்படும் இதனை செய்து விட்டால் போதுமானது. இதனை மைக்ரோ பிளாக் வலைத்தளத்தில் பிரசுரிக்கலாம். அல்லது குறிப்பிட்ட வாசகர்களுக்கு அனுப்பி வைக்கலாம். எழுத்து, ஒலி, வீடியோ ஆகியவற்றைக் கூட நீங்கள் மைக்ரோ பிளாக்கில் பதிவு செய்யலாம். உங்கள் வாசகர்கள் அதனை ஆன்லைனில் காணலாம். அவர்களது கணினிகளில் உடனடி செய்திகளை பெறலாம். அல்லது தங்களது செல்பேசியில் உரைச் செய்தியாக படிக்கலாம்.

Wednesday, May 7, 2008

அ‌க்‌னி-3 ஏ‌வுகணை சோதனை வெ‌‌ற்‌றி

அணு ஆயுத‌ங்களை‌ தா‌‌ங்‌கி‌ச் செ‌ன்று 3,000 ‌கி.‌மீ தொலை‌வி‌ல் உ‌ள்ள இல‌க்கை தா‌க்கு‌ம் வ‌ல்‌லமை உடைய அ‌க்‌னி-3 ஏவுகணை சோதனையை இ‌ந்‌தியா இ‌ன்று வெ‌ற்‌றிகரமாக நட‌த்‌தியது.

ஒ‌ரிசா மா‌நில‌ம் ச‌ண்டிபூ‌ர் எ‌ன்னு‌மிட‌த்‌தி‌லிரு‌ந்து இ‌ன்று காலை ச‌ரியாக 9.55 ம‌ணி‌க்கு வெ‌ற்‌றிகரமாக ஏ‌வ‌ப்ப‌ட்ட இ‌ந்த ஏவுகணை மிகச்சரியாக தனது இலக்கை சென்று தாக்கியது எ‌ன்று‌ம் இதன் மூலம் இந்த ஏவுகணைச் சோதனை மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது எ‌ன்று‌ம் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அ‌‌க்‌னி-3 ஏவுகணை வெ‌ற்‌றிகரமாக ‌வி‌ண்‌ணி‌ல் செலு‌‌த்த‌ப்படுவது இது மூ‌ன்றாவது முறை எ‌ன்பது கு‌றி‌ப்‌பி‌ட‌த்த‌க்கது.

இந்த ஏவுகணை 48 டன் எடையும், 16 மீட்டர் உயரமும் கொண்டது. 1.5 டன் எடையுள்ள அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் சக்தி கொண்ட இது, 3 ஆயிரம் கி.மீ. தொலைவு பறந்து சென்று தாக்கும் திறன் கொண்டது.

'யு ட்யூப்'பின் இந்திய தளம் அறிமுகம்


'யு ட்யூப்' வீடியோ பரிமாற்ற இணைய தளம் இந்தியாவுக்கான தனி சைட்டை அறிமுகம் செய்துள்ளது. பிரபல வீடியோ பரிமாற்ற இணைய தளமான 'யு ட்யூப்' இன்டர்நேஷனல் தற்போது இந்தியாவுக்கென்று தனியாக தளத்தை (YouTube.co.in) தொடங்கியுள்ளது.

இந்தியாவில் நடக்கும் நிகழ்வுப் படங்கள், கருத்துப் படங்கள், விளம்பர படங்களின் வீடியோக்கள் யூ ட்யூபின் இந்திய தளத்தில் இனி வெளியிடலாம்.
மேலும் வீடியோக்களை வெளியிட இரோஸ் என்டர்டெய்ன்மென்ட், ராஜ்ஸ்ரீ குழுமம், டெல்லி ஐஐடி, ஐஐஎன்எ, என்டிடிவி, யுடிவி, ரூம் டிவி, இண்டியா டிவி, க்ரிஷ் கிரிக்கெட் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் இந்தியா தொடர்பான வீடியோக்களை இந்த புதிய தளத்தில் காணலாம்.



Monday, May 5, 2008

ஏர்டெல் எஸ்.டி.டி கட்டணம் குறைப்பு


தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான `பார்தி ஏர்டெல்' தனது செல்போன் வாடிக்கையாளர்களுக்கு, தொலைதூர அழைப்பு (எஸ்டிடி) கட்டணத்தை நிமிடத்துக்கு 2 ரூபாய் 65 காசில் இருந்து ஒரு ரூபாய் 50 காசாக குறைத்து உள்ளது. இதேபோல் வெளிமாநிலங்களில் ரோமிங்கில் இருக்கும் போது, வரக்கூடிய மற்றும் தொடர்பு கொள்ளும் அழைப்புகளுக்கான கட்டணம் நிமிடத்துக்கு ஒரு ரூபாய் 75 காசில் இருந்து ஒரு ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டணக் குறைப்பு நாளை (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் 6 கோடியே 20 லட்சம் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பயன் பெறுவார்கள்

எஸ்.எம்.எஸ் மூலம் ரயில் டிக்கெட்

குறுந்தகவல் சேவை (எஸ்.எம்.எஸ்) மூலம் முன்பதிவு செய்யாத ரயில் பயணச் சீட்டு பெறும் திட்டத்தை ரயில்வே துறை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

புதுடெல்லியில் நேற்று இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே தகவல் திட்ட மையத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பொதுமேலாளர் ஆர்.பத்ரி நாராயணன், தகவல் தொழில் நுட்ப அடிப்படையில் முன்பதிவு செய்யாத ரயில் டிக்கெட்டுகளை எடுக்கும் திட்டம் 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதாகவும், தற்போது இத்திட்டம் நாடு முழுவதும் உள்ள 6 ஆயிரத்து 275 ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் கூறினார்.

மொத்தம் 21 ஆயிரம் விற்பனை மையங்கள் மூலம் முன்பதிவு செய்யாத ரயில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என்று கூறிய அவர், முன்பதிவு செய்யாத ரெயில் டிக்கெட்டுகளை செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பி எடுக்கும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றார்.

இதற்காக தகவல் தொழில் நுட்ப மையம், மென்பொருள் ஒன்றைத் தயாரித்து இருப்பதாகவும், இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து செல்போன் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இத்திட்டத்தில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டவுடன் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்றார் அவர்.

2010-ம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு விடும். இதற்கு மொத்தம் ஆயிரத்து 300 கோடி ரூபாய் செலவு பிடிக்கும் என்றும் பத்ரி நாராயணன் கூறினார்.