Sunday, December 16, 2012

நீ தானே என் பொன்வசந்தம்



கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில் வெளிவந்திருக்கும் காதல் காவியம் “ நீ தானே என் பொன்வசந்தம்”

மின்னலே,வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா படங்களின்  வெற்றியினை தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனனின் காதல் திரைப்பட வரிசையில்  -நீதானே என் பொன்வசந்தம்.”. இசைஞானி இளையராஜாவின் இசை இத்திரைபடத்திற்கு மேலும் மெருகு சேர்த்திருக்கிறது.

வருண் - நித்யாவின் மழலை காதல் - விடலை காதல் - கல்லூரி காதல் - பருவ காதல் என ஒவ்வெரு கட்டத்திலும் சிறு சிறு பிரச்சனைகளால் பிரியும் காதலர்கள் இறுதியில் சேர்ந்தார்களா இல்லையா என்னும் நான்கு வரிக் கதையினை வைத்து திரையரங்கில் நம்மை 153 நிமிஷங்கள் கட்டி போட்டிருக்கிறார் இயக்குனர் கெளத்தம் வாசுதேவ் மேனன்.

படம் சில  வருடங்களுக்கு முன் நடப்பதை உணர்த்தும் விதமாக பணக்கார  நாயகி அந்த காலகட்டத்தில் பிரபலமான நோக்கியா 3110 செல்ஃபோனை உபயோகப்படுத்துவதாக காட்டுவது இயக்குனரின் லாஜிக் சென்சிற்கு ஒரு எடுத்துக்காட்டு.



 நாயகன் - ஜீவா  கோ படத்தல யூத்-ஆ இருந்தவர் அதைவிட இளமையா சில காட்சிகளில் தெரிஞ்சாலும் மிகவும் சிறப்பான நடிப்பு மற்றும்  இளமையான தோற்றத்தின் மூலமாக அனைவரின் மனம் கவர்ந்திருகிறார்.


நாயகி சமந்தாவின் நடிப்பை பாராட்டலாம். பாடசாலை சிறுமி தொடக்கம் கல்லூரி மாணவி வரை தனது நடிப்பாலும் அழகாலும் கலக்கியே உள்ளார். 


 படத்தின் சிறப்பம்சங்கள்:

 நாயகன் ஜீவா-வின் அண்ணன் தான் விரும்பிய பெண்ணின் வீட்டுக்கு பெற்றோருடன் சென்று பெண் கேட்டு அவமானப்பட்டு வீடு திரும்பியவுடன் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறுவதும் - .ஜீவாவின் திருமணத்துக்கு முன்னதான அந்த இரவு சந்திப்பும், பழைய நினைவுகள் மீட்டல்களும் மனதை நெகிழச் செய்கிறது.



சந்தானம் - வித்யுலேகா ராமன் ( ஜெனி) - காதல் - படத்தின் பெரிய பலம். மற்றும் சந்தானம் பேசும் ஆங்கிலம் கொஞ்சம் ஹார்டாக இருந்தாலும் முதல் பாதி முழுவதும் நம்மை கலகலப்பாக கொண்டு போக உதவுகிறார். 

ஓம்பிரகாஷ், எம்.எஸ்.பிரபு, எஸ்.ஆர்.கதிர் ஆகியோரின் ஒளிப்பதிவு இக்கதைக்கு வலு சேர்க்கும் விதமாகவே அமைந்திருக்கிறது. தேவையான இடங்களில் பிரமிப்பையும், சில இடங்களில் ரசனையோடு ஈர்க்கவும் வைக்கின்றன.


இளையராஜாவின் வழக்கமான இசையை ரசித்துக் கொண்டிருந்தாலும்,  இப்படத்தில் புது வித கம்போசிங்கில் தனதே தனதான ஸ்டைலில் இசைஞானி என்பதை நிருபித்திருக்கிறார்.

கௌதம் வாசுதேவ் மேனன் காதலர்களுக்கிடையே வரும் சின்னச்சிறு சண்டைகளை அப்படியே கண்முன் நிறுத்தியுள்ளார். படத்தை பார்க்கும் பொழுது அட நானும் இப்படித்தானே காதலித்தோம் என நினைக்க வைக்கும் முறையில் தனது கதையினை நகர்த்தி சென்றுள்ளார்.

க்ளைமேக்ஸ் - விண்ணைத்தாண்டி வருவாயா போலவே நெகடீவ் என பதட்டப்பட வைத்து சுபமாக முடிப்பது இயக்குனரின் சிறப்பம்சம்.

கும்கி


மைனா என்னும் வெற்றி படைப்பினை தொடர்ந்து பிரம்மாணடமாய் கும்கி. மைனாவில் ச‌ரியாக ஒரு மலைக்கிராமத்தை பிரதிபலித்தவர் மீண்டும்  ஒரு மலைக்கிராமத்தினை பின்னணியில் படைத்திருக்கும் காதல் காவியம் - கும்கி.

காட்டு யாணையின் அட்டகாசத்தில் மலைக்கிராமத்து மக்கள் கொடூரமாய் கொல்லப்படுகிறார்கள். அரசாங்க அதிகாரிகளோ இடத்தை காலி பண்ணிவிட்டு வேறு இடத்திற்கு செல்லவேண்டியதுதானே என தெரிவிக்க 200 வருட பாரம்பரிய மலைநில விவசாய வாழ்க்கையை, கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்க விரும்பாத கிராமத்து மக்கள்
தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள   காட்டு யானைகளைகளுடன் மோதி சண்டையிட்டு அழிப்பதற்காக தயார்படுத்தப்பட்ட ஒரு கும்கி யானையைக் கொண்டுவருகின்ற முடிவு செய்கின்றனர்.

கும்கி யானைப்பாகனுக்கு குடும்ப பிரச்சினை வர, இரண்டு நாள் சமாளிக்க புதிதாக ஒரு யானை வருகிறது வெடி வெடித்தாலே தலைதெறிக்க பயந்து ஓடும் பயந்த திருவிழா யானை மாணிக்கம்.
இரண்டு நாள் அங்கே வந்த  நாயகன்  நாயகியை கண்டதும் காதலாக அதன் பின் நடக்கும் சம்பவங்கள் தான் கும்கி திரைப்படத்தின் கதை.



நடிகர் திலகம் சிவாஜியின் பேரனும், பிரபுவின் மகனுமான அறிமுக நாயகன் விக்ரம்பிரபு - நல்லதொரு தொடக்கம். உயரம், உடல் வாகு எல்லாம் பாகனுக்கு பொருந்துகிறது. காதல் - சோகம் என்கிற இரண்டே உணர்ச்சிகளுடன் இவர் கேரக்டர் செல்கிறது.  கோபத்தில் புடைக்கும் மூக்கும், கட்டான உடலும் இருப்பதால் இவரை விரைவில் ஆக்ஷன் ஹீரோ அவதாரத்தில் காணும் சாத்தியக்கூறுகள் அதிகம்!



அறிமுக நாயகி - லட்சுமி மேனன் - இது தான் அவருடைய முதல் திரைப்படம் என்றாலும் அவர் இரண்டாவதாக நடித்த சுந்தர பாண்டியன் முதலில் வெளியானது. சுந்தர பாண்டியனில் பார்த்ததை விட இளமையாக,  காட்டு வாசி பொண்ணு! அதுக்கேத்த ட்ரெஸ், ஊசி பாசி இத்யாதி இத்யாதிகள், சைடுல குதிரவால் ஹேர் ஸ்டைல்னு மேக்கப்பே இல்லாமல் நடிக்க தெரிந்த அழகான நடிகை ! 


 தாய்மாமனாக வித்தியாசமான கெட்டப்பில் தம்பி ராமைய்யா!  படத்தின் கலகலப்புக்கு மொத்த குத்தகைதாரர்.இவர் மைன்ட் வாய்ஸில் புலம்பும் போதும்,

அவரை கும்கி பயிற்சியில் தேர்ந்த குரு என நினைத்து மலைவாசிகள் பெருமையாக பேசுவதும், அதற்கு அவர் உள்ளுக்குள்ளேயே புலம்புவதும்,

போலீசிடம் " நீங்களும் ஒரு மாமா தானே? " எனும்போதும் , டெம்போவில் யானை ஏற்றி போகும் போது பேசுவதாகட்டும் 

பன்னிப்பயலே உனகெல்லாம் First Night ஆரம்பிக்கும்போது பககவாதம் வந்துடனும்

உனக்கு சாபம் விடறேன்.. நீ எத்தனை கல்யாணம் பண்ணினாலும் அது டைவர்ஸ்ல தான் போய் முடியும்..
 
போன்ற வசனங்களின் மூலம் திரையங்கயே கலகலக்க வைக்கிறார்.



இசை டி.இமான், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயா‌ரிப்பு, படத்தை வெளியிடுவது ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கி‌‌ரீன் என்று பக்கா பட்டாளம். ஒளிப்பதிவு சுகுமார், பாடல்கள் யுகபாரதி என்று அதே பழைய மைகா கூட்டம்..

படத்தின் சிறப்பம்சங்கள்:

இயற்கையோடு இணைந்த எளிமையான காதல் கதை, அற்புத பாடல்கள், அழகான  நாயகன் - நாயகி. நல்ல நகைச்சுவை..  

இமானின் இசை செவிக்கு விருந்து..  அனைவரையும் கட்டிபோட்டுவிட்டது.

எடிட்டர் எல்.வி.கே.தாஸ் கைவண்ணத்தில், மைனா புகழ் சுகுமாரின் ஒளிபதிவில் கும்கி திரையுலகை அதிரவைப்பது நிச்சயம்.

குழந்தையாய் இருக்கும் மாணிக்கம் பயிற்சி பெற்றவுடனேயே அது கும்கியாக மாறி கொம்பனை துவம்சம் செய்வது போல் காட்டாமல்  எளிதில் யூகிக்க முடியாத ஒரு க்ளைமேக்ஸை தேர்ந்தெடுத்ததில் இயக்குனர் வெற்றி பெறுகிறார்.

கும்கி கண்டிப்பாக ரசிகர்களின் இதயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!




Sunday, December 9, 2012

சென்னை சர்வதேச திரைப்பட விழா


இந்திய திரைப்பட திறனாய்வுக் கழகம் ( ICAF) 2003 ஆம் ஆண்டு முதல் சென்னை சர்வதேச திரைப்பட விழா (CIFF) என்னும் அமைப்பினை தொடங்கி ஆண்டுதோறும் சிறந்த திரைப்படம், தயாரிப்பாளர், இயக்குனர், மற்றும் திரைத்துறையச் சார்ந்தவர்களை ஊக்குவித்து வருகிறது.

இந்த முறை 10-வது ஆண்டாக சர்வதேசத் திரைப்பட விழா எதிர்வரும் டிச12-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் இத் திரைப்பட விழாவில் 54 நாடுகளில் தயாரிக்கப்பட்ட 172 திரைப்படங்கள், 8 நாட்களில் 8 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.

இதில் ஆஸ்கார் மற்றும் கேன்ஸ் விருதுகள் பெற்ற பல படங்கள் திரையிடப்படுகிறது. இந்த ஆண்டின் புதுமையாக கொலம்பியா, ஆஸ்திரேலியா, ஹங்கேரி மற்றும் துருக்கி நாட்டு திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.

இராஜா ஹரிச்சந்திரா என்கிற படத்தை தாதா சாகேப் பால்கே அவர்கள் முதல் முதலில் தாயாரித்து திரையிட்ட மே 3 1913 - இந்திய சினிமாவின் பிறப்பாகும்.
இந்திய சினிமாவின் நூற்றாண்டை குறிக்கும் வகையில் சந்திரலேகா(தமிழ்), மேக சந்தோஷம்(தெலுங்கு), பதர் பாஞ்சாலி(பெங்காலி), கைடு(இந்தி), வீப்பா(கன்னடம்), வதுகார அல்லது தம்பு(மலையாளம்) ஆகிய படங்களும் திரையிடப்படுகிறது.

உலக சினிமா பிரிவில் கடந்த 12 மாதங்களில் வெளியான உலகின் மிகச்சிறந்த படங்கள் திரையிடப்பட உள்ளன.

பிரான்ஸ் இயக்குனர் கிளாடே சாப்ரோல் இயக்கிய படங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. பிட்டர் ரியூனியன், இன்ஸ்பெக்டர் லாவர்டின், பெட்டி, ஹெல், தி பிளவர் ஆப் ஈவில் ஆகிய படங்களும் திரையிடப்படுகின்றன.

2011-ல் காலமான கிரீஸ் இயக்குனர் மைக்கேல் காக்கோயானிஸ் நினைவாக ஜோர்பா தி கிரிக் மற்றும் எலக்ட்ரா ஆகிய படங்களும் திரையிடப்படுகின்றன.
தமிழ் படங்கள் பிரிவில் தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள்:




The Hindu நாளிதழ் நடத்தும் குறும்படப் போட்டியும் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு நிறைவு நாள் விழாவில் பாலிவுட் நட்சத்திரம் அமிதாப்பச்சன் கலந்து கொண்டு பரிசு வழங்குவார் .

இவ்விழாவிற்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் நிதிஉதவி அளித்துள்ளது. இதில் பார்வையாளராய் பங்கேற்க திரைத்துறையினருக்கும் , மாணவர்களுக்கு ரூ.300  பொதுமக்களுக்கு ரூ.500 என கட்டணம் நிர்னயிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கட்டுகளை இணையம் மூலமாகவும், நேரிலும் பதிவுசெய்துகொள்ளலாம்.

Friday, December 7, 2012

நீர்ப்பறவை


 தென்மேற்கு பருவக் காற்று படத்தின் மூலம் தேசியவிருதை தட்டி வந்த இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த படம் உதயநிதிஸ்டாலினின் தயாரிப்பில் "நீர்ப்பறவை"

கால் நூற்றாண்டிற்க்கு முன் கடலுக்கு சென்று திரும்பாத கணவனுக்காக காத்திருக்கிறாள் மனைவி. ஒரு கட்டத்தில் அவனது எலும்புக்கூட அவளின் வீட்டிற்குள்ளேயே கண்டுபிடிக்கப் படுகிறது. காணாமல் போனவன் எப்படி பிணமானான் என்று போலீஸ் விசாரணை செய்ய, அவளோ தன் கணவனை கொன்றதாக வாக்குமூலம் கொடுக்கிறாள். எப்படி? எதற்காக? என்பதை கால் நூற்றாண்டு பின்னோக்கிச் சென்று குடிகாரனான அருளப்பசாமிக்கும், சர்ச்சில் ஊழியம் செய்யும்  கன்யாஸ்திரியின் வளர்ப்பு மகளான எஸ்தருக்குமிடையே ஆன காதல்...



சேவியர் - அருளப்பசாமி - எஸ்தர் - மேரி - லூர்தசாமி - ஆப்ரகாம் - ஜோசப் பாரதி - எபிநேசர் - பெனிடா - அஜேனிஸ் போன்ற கிருத்தவ பெயர்களுடன் ராமேஸ்வரம் தங்கச்சி மடம் - மீனவ குப்பத்தின் பிண்ணணியில் குடிப்பழக்கம்,மீனவர் பிரச்சனை, இலங்கை தமிழர் இன்னல் என பல சமூக அவலங்களை சிற்ப்பாக சித்தரித்திருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. 

வெண்ணிலா கபடிக்குழு - குள்ள நரிக்கூட்டம் வெற்றிப்படங்களை தொடர்ந்து நாயகன் விஷ்ணுவுக்கு இது முக்கியமான படம். ஒவ்வொரு காட்சியிலும்  விஷ்னு  நடிப்பின் முக்கியத்துவத்தினை உணர்ந்து சிறப்பாக  நடித்திருக்கிறார்..


நாயகி சுனைனாவுக்கு லைஃப் டைம் கேரக்டர். மேக்கப் இல்லாமல் கடற்கரையோர எஸ்தராகவே மாறியிருக்கிறார். - கடலோரும் வாழ்பவர்கள் கருப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இளஞசிவப்பு உதட்டழகி இப்படி கருக வைத்திருப்பது தவிற்கப்பட்டிருக்கலாம்.

நாயகன் தன்னை பார்க்க வரும்போது “சாத்தானே  அப்பால் போ!” என பயந்து ஓடுவதும், பற்கள் தெரியாமல் சிரிப்பதும்,  காதலை கண்ணிலே காட்டுவதும், படகு தயாராகும் போது ஆர்வத்துடன் வந்து பார்பதுமாக.. தன் நடிப்பினை சிறப்பாக வெளிப்படிதிருக்கிறார்...

நாயகனின் தந்தையாக வரும் "பூ' ராமுவுக்கு நேர்த்தியான பாத்திரம். பாசக்கார தாயாக வரும் சரண்யாவுக்கு இது மற்றொரு பரிமாணம். . தென்மேற்குப் பருவக் காற்றில் அசத்தியது போல் இதிலும் அவரது நடிப்பு அருமை..

குடிக்க தன்மகனுக்கு காசுகொடுக்கும் போது  வழங்கும் அறிவுரை - “நல்ல சரக்கா வாங்கி குடிடா; கண்ட கண்ட சரக்கை குடிச்சு உடம்பை கெடுத்துக்காதே", போதை மறுவாழ்வு மையத்தில் “ பாத்து மெதுவா திருத்துங்கடா.. ஓரேயடியா திருத்திடாதீங்க”... என்றும் பின் “ செல்லம் கொடுத்துதான் கெடுத்துடோம்” என்று புலம்புவதும் அம்மா பாத்திரத்துக்கு பொருத்தம்..

 

பங்குத்தந்தையாய் வரும் அழகம்பெருமாள் அந்த வட்டார வழக்கை பேசி அருமையாக நடித்திருக்கிறார்..

பிளாக் பாண்டி திருந்திய பிறகு பாதர் " என்னப்பா ஒழுக்கமா இருக்க ஆரம்பிச்சிட்டே போலருக்கே" அதுக்கு பிளாக் பாண்டி " ஆமா பாதர்; ஆனா ஞாயித்து கிழமையானா ஒழுக்கத்துக்கு லீவு விட்டுடுவேன் பாதர் "

விஷ்ணுவும் பிளாக் பாண்டியும் பாதரிடம் பாவ மன்னிப்பு கேட்க செல்லும் இடம் ...

சுனைனாவிடம் சரண்யா " நீயாவது அவன்கிட்டே பேசி வேலைக்கு அனுப்பு; இந்த காலத்து பசங்க எல்லாம் அம்மா சொன்னா எங்கே கேட்குறானுங்க? உன்னை மாதிரி சின்ன வயசு பொண்ணு சொன்னாதான் கேக்குறானுங்க"



இயக்குனர் சீனு ராமசாமி வரும் ஒரே காட்சி: அதில் அவரும் தம்பி ராமையாவும் பேசும் டயலாக் " பாத்துய்யா ; லேடிஸ் ஸ்கூல் வேணும்னு ஆர்வமா இருக்குறே ; பாலியல் புகார் வந்துட போகுது "

இவ்வளவு ஆழமான மீனவ வாழ்க்கை இதுவரை தமிழ் திரையுலகில் சொல்லப்படவில்லை என்றே தோண்றுகிறது..

முஸ்லீம் மீனவராக வரும் இயக்குனர் சமுத்திரக்கனியின் அனல் வீசும் வசனம் “இந்த நாட்ல வெறந்த தொழில் செய்யரவனையும் வேற நாட்டுகாரங்க சுட்டா சும்மா விடுவானா..நம்மகிட்ட ஒத்தும இல்லயா... ஒரு கவர்மெண்டு பஸ்காரன அடிச்சா.. தமிழ் நாட்டுல ஒரு பஸ் கூட ஓடாது தெரியுமா...”  மீனவர்களின் இன்றய பிரச்சனைய பறைசாற்றுகிறது..

படத்தின் சிறப்பம்சங்கள்:

சுப்பிரமணியனின் கேமரா கதையை கைப்பிடித்து கூட்டிச் செல்கிறது. முன் பின் நகரும் திரைக்கதையை குழப்பம் இல்லாமல் கச்சிதமாக செதுக்கியிருப்பதில் எடிட்டர் காசி.மு.விஸ்வநாதனின் உழைப்பு மிக அருமை.


 என்.ஆர்.ரஹ்நந்தனின் பின்னணி இசை படத்துக்கு பலம். சூழ்நிலைக்கு ஏற்ற 
பாடல்கள், மீனவர்களின் வலியை கவிஞர் வைரமுத்து வரிகளாக்கிய விதம் - பிரம்மாண்டம்..

தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக இதுபோன்றா கதையை விவாதத்துக்கு கொண்டு வந்ததற்காகவே சீனு ராமசாமிக்கு வாழ்த்துகள். "முதல் கல்'லை எறிந்த கவனிக்கத்தக்க சில இயக்குநர்களின் பட்டியலில் "நீர்ப்பறவை' மூலம் இணைந்திருக்கிறார் சீனு ராமசாமி.


Saturday, December 1, 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்


தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நாயகனாய் அறிமுகமாகி இயக்குனர் சசிகுமாரோடு நடித்த சுந்திரபாண்டியன் திரைப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து யாருமே எதிர்பார்காத வகையில் தற்போது வெற்றி நடை பயின்றுகொண்டிருக்கும் பீட்சா திரைபடத்தின் மூலம் முன்னனி கதாநாயகனாய் உயர்ந்துள்ள விஜய சேதுபதி நடித்த மற்றும் ஒரு படைப்பு - நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்..

விஜய் சேதுபதிக்கு அடுத்த  நாள் தான் காதலித்த பெண்ணுடன் திருமணம். தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்து, வா ஒரு ஆட்டம் கிரிக்கெட் ஆடுவோம் என்று ஆட, ஆட்டத்தின் நடுவில் கேட்ச் பிடிக்கப் போய் மல்லாக்க விழுகிறார் சேது. அதன் பிறகு அவருக்கு Stop block போல கிட்டத்தட்ட ஒரு வருடம் நடந்த சம்பவங்கள் மறந்து போய்விடுகிறது. அவரின் காதல், நாளைய திருமணம் என்று எல்லாமே. இந்த பிரச்சனையை சமாளித்து எப்படி அவரது நண்பர்கள் அவருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் - திருமணம் நடந்ததா அவருக்கும் மீண்டும் நினைவு திரும்பியதா  என்பதே  ”நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” இத்திரைப்படத்தினை இவ்வளவு சுவாரசியமாய் எடுத்துச் சென்றிருக்கும் புதிய இயக்குனர் பாலாஜிதரனிதரனின் திறமை பாராட்டப்படவேண்டும்.

இந்த படைப்பின் ஒளிப்பதிவாளர் ப்ரேமின் வாழ்வில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இத்திரைப்படம் அமைந்திருக்கிறது என்பது முக்கிய செய்தி.


முதல் காட்சியில் அடிபட்டவுடன் அவர் பேசும் டயலாக் “நீ பால் போட்ட, இவன் அடிச்சான். பால் மேல போச்சா.. நான் கேட்ச் பிடிக்கப் போனேன். அப்ப கால் சிலிப் ஆயிருச்சா? என்று நடந்ததை சொல்லிவிட்டு, அதுக்கப்புறம் என்னாச்சி?  என்று கேட்டபடியே “பின்னாடி அடிபட்டிருச்சு இல்லையா? Medula ablangada வில அடிபட்டிருக்கும் அதான் இப்படி ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை கொஞ்சம் நேரத்தில சரியாயிரும்” என்று அவரே சமாதானமும் கொடுத்த மாத்திரத்தில் மீண்டும் அதே டயலாக்கை பேச ஆரம்பிப்பது அட்டகாசம்.

காதலியையே கல்யாண ரிஷப்ஷனில் முதல் முறையாய் பார்ப்பது போல பார்த்து “ச்சே... என்னடா மேகப் இது.. பேய் மாதிரி இருக்கு” என்று திரும்பத் திரும்ப சொல்ல, அதனால் கல்யாணம் நிற்கும் வரைக்கும் போகும் காட்சியும், “எப்படி டா சைராபானுவுக்கு துரோகம் பண்றது?” என்று ஆறாம் க்ளாஸில் காதலித்த பெண்ணைப் பற்றி பேசுமிடமெல்லாம் அருமையான நடிப்பாற்றலை வெளிப்படுத்திருக்கிறார் விஜய சேதுபதி.



படத்தின் சிறப்பம்சங்கள்:
  1. நண்பர்களாய் வரும் மூன்று பேர். மிடில் ஏஜ் கேரக்டரில் வரும்  நண்பரின் முழியும், பேச்சும் அட்டகாசம். கிரிக்கெட்டில் ஓவர் காஜு அடிப்பதாகட்டும், சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் மற்றவனை மாட்டி விட்டு வேடிக்கைப் பார்க்குமிடமாகட்டும் மனிதர் கலக்குகிறார். 
  2. திரைக்கதை எதுவாய் இருப்பினும் - அதில் நாயகன் துரத்தி துரத்தி காதலிக்க ஒரு நாயகி.. ஒரு டூயட் ஒரு சோகம்,  ஒரு குத்து பாடல்..என எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களும் இல்லாமல்... ஒரு புதுமையான கோணம்...
  3. Censor certificate - Title போட்டுமுடிந்தவுடன் அறிமுகப்படுத்தப்படும் நாயகன் - நாயகி என்றில்லாமல்  படத்தின் முக்கால்வாசியிலேயே நாயகின் அறிமுகம்.
  4.  நானும் வில்லன் இல்லாத ஒரு திரைப்படமா.. அவனயாவது காமிப்பாங்கனு கடைசிவரைக்கும் பொருமை காத்தேன்..  படம் முடிஞ்சது தான் மிச்சம். 
நாயகன் விஜய சேதுபதி தற்போதய Low budget - படைப்பாளிகளின் நாயகனாக உருவெடுத்திருக்கிறார் என்றே கூறலாம்..

தனது வெற்றிப்பட வரிசையில் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படம் ஒரு தனி முத்திரை பதிக்கும் என்பதில் ஐயமில்லை...