Thursday, July 18, 2013

இரங்கல்: பாடலாசிரியர் வாலி



பிரபல தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வாலி இன்று  ( 18-07-2013) தனியார் மருத்துவமனையொன்றில் காலமானார். அவருக்கு வயது 82.

ஸ்ரீரங்கத்தை சேர்ந்த வாலியின் இயற்பெயர் டி.எஸ்.ரங்கராஜன். தமிழ் மீது தீராத பற்று கொண்டிருந்த இவருக்கு ஓவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. ஆனந்த விகடனில் ஓவியங்கள் வரைந்து கொண்டிருந்த மாலியைப் போல் சிறந்த ஓவியராக வேண்டும் என்பதற்காக இவருடைய பள்ளித் தோழர் பாபு, இவருக்கு வாலி என்று பெயர் சூட்டினார். அன்றிலிருந்து வாலி என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

1958-ம் ஆண்டு படங்களுக்கு பாடல்கள் எழுதத் துவங்கிய கவிஞர் வாலி இதுவரை 10 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத்துடன் உலா வந்த இவர், சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கு மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். ‘ஹேராம்’, ‘பார்த்தாலே பரவசம்’, ‘பொய்க்கால் குதிரை’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 2007-ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. ஐந்து முறை சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழில் எதுகை மோனையில் பாடல்கள் எழுதுவதில் இவரைவிட சிறந்த கவிஞர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

நுரையீரல் தொற்று மற்றும் அதிகமான சளியின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். 35 நாட்களாக அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் கடந்த 2 நாட்களாக இவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. 

No comments:

Post a Comment